
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை எல்லை மீறியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக 10 பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களது ஒரு படகையும் பறிமுதல் செய்து மன்னார் முகாமிற்கு கொண்டு சென்றனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் சோகமடையச் செய்துள்ளது. இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் மீனவர்கள் குடும்பத்தினர், மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



