
சேலம் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் உத்தம சோழபுரம் அருகே இன்று (மார்ச் 20) சென்று கொண்டிருந்த அரசு பஸ் அரியானூர் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு எதிர்புற சாலைக்குள் புகுந்தது. அப்போது அஇவ்வழியாக சென்ற டூவீலர் மற்றும் ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டூவீலரில் பயணம் செய்த இரண்டு பேர்,சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 11 மாதக்குழந்தை உள்பட 5 பேர் என 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ் தாறுமாறாக ஓடியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



