
நாளந்தாவில் 8 பேர் பலியான சோகத்தில் உறவினர்கள்.
பிஹாரில் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலியாகியுள்ளனர்.

ஷீத்லா கோயில் அருகே திரண்டிருந்த பக்தர்கள்
பிஹார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் ஷீத்லா கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற வழிபாட்டின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்ததால், கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் உடனடியாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 8 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கூட்ட நெரிசல் குறித்து பக்தர்கள் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று நாளந்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோயிலில் கூடுவது வழக்கம். ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகள் இல்லை என்று கூறினர். இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட நிர்வாகம் கோயிலை மூடியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிஹார் தலைமைச் செயலாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஷீத்லா கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிஹார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில், கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி . உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ₹6 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீப்நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியான சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



