
கட்டுரையாளர் ம.மணிமாறன் விருதுநகரில் வசித்து வருகிறார். சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30 வருடங்களாக புத்தக வாசிப்பை விட்டு விடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பவர். குறிப்பாக புனைவிலக்கியங்களின் தீராக்காதலர். வாசிப்பதோடு நிறுத்தி விடாமல் புத்தகங்கள் குறித்த தன் மதிப்பீடுகளைத் தொடர்ச்சியாக சிற்றிதழ்களில் எழுதி வருகிறார்.
செம்மலர் மாத இதழிலும், சிறுகதை எனும் காலாண்டிதழிலும் ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார். கதைகளும் கதையாடல்களும், கன்னி நிலத்தின் கதை, சொல்லித் தீராதது, தூரத்து புனைவுலகம், போருக்கு அப்பால் என ஆறு நூல்களும் தமிழ் படைப்புலகம் பற்றிய வாசகப்பரவசம் குறித்த கட்டுரைகள்.
கைப்பிடி மணல் என்ற ஆசிரியர், மாணவர் உறவு குறித்த அனுபவப் பகிர்வு நூலும், ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறேன், வெயிலும் மழையும், கரிசல் நிலவியல் கதைகள், கரிசல் வட்டார வழக்காறுகள் என நான்கு நூல்களும் சிறுகதைத் தொகை நூல்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர். தொன்னூறுகளில் தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கச் செயல்பாடுகளே இவரின் எழுத்துகளின் வித்துகள்.
சிறுகதையின் மாஸ்டர்கள்
மாமதுரையின் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கடந்த ஆண்டு வைகை இலக்கியத் திருவிழாவில் கதைகளின் கதை குறித்து பேசினேன். பேச்சின் நடுவில் தமிழில் நூற்றுக்கணக்கில் சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது உலகின் வேறு எந்த மொழிக்கதைகளுக்கும் இல்லாத தனித்த சிறப்பு என்றேன். .அவர்கள் வெறும் எழுத்தாளர்கள் அல்ல, சிறுகதையின் மாஸ்டர்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக கூறினேன்.
பொதுவெளியில் இலக்கியம் சார்ந்து ஒரு கருத்தை முன் வைக்கிறபோது அதனை பரிசோதனை செய்யாமல் முன் வைக்கக்கூடாதல்லவா. அதற்கான இடமாக இந்தப் பக்கத்தை பயண்படுத்தலாம் என நினைக்கிறேன். தமிழ்ச் சிறுகதையாளர்களின் ஆகச் சிறந்த கதைகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளவே ‘ஒரு கதை’ எனும் இந்தத்தொடர் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும்.
எந்த மொழிச் செயல்பாட்டிற்கும் ஒரு நல்ல துவக்கம் மிகவும் முக்கியம். அப்படியானால் இந்த தொடரை யாரின் கதையிலிருந்து துவங்குவது.?. இது என்ன கேள்வி? தமிழ்ச்சிறுகதைகள் குறித்து பேசுவது என்றால் புதுமைப்பித்தனின் கதைகளில் இருந்துதானே துவங்க வேண்டும்.. அதுவும் சரிதான், பொதிகைச் சித்தன் பித்தனே தமிழ்ச்சிறுகதைகளின் ஆதார ஊற்று. அவரிலிருந்தே துவங்கலாம்.

புதுமைப்பித்தன்
மணிக்கொடி
புதுமைப்பித்தன் 103 கதைகள் எழுதியிருக்கிறார். அதில் எதைச் சொல்வது? ஒவ்வொரு வாசகனுக்கும் தனித்தனியான தேர்வுகள் இருக்கும்.அதிலும் புதுமைப்பித்தன் எல்லோருக்குமான எழுத்தாளர். சிலர் அவருடைய செல்லம்மாள், கடவுளும்,கந்தசாமிப்பிள்ளையும்,ஒரு நாள் கழிந்தது என நேர்கோட்டு யதார்த்த கதைகளை லயித்து வாசித்திருப்பர்.. மாய யதார்த்தவாதம் என தொன்னூறுகளுக்குப் பிறகு தமிழ்க் கதைகள் அடைந்த சிற்சில மாற்றங்களையும்கூட எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனின் சில கதைகளில் இருந்தே தருவித்துக் கொண்டனர்.
அவருடைய மனக்குகை ஓவியங்கள், பிரம்மராட்சஸ் போன்ற கதைகள்,இந்த வகையில் மிகவும் தனித்தவை. ஒரு எழுத்தாளரின் மீது புனையப்படும் புனைவுகள் ருசிகரமானவை. சுதந்திரப் போராட்டம் உக்கிரமாக இருந்த 1930-களில் கதை எழுத வந்தவர் புதுமைப்பித்தன். காந்தியவாதிகளான வ.ரா, பி.எஸ்.ராமையா போன்றவர்களின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த மணிக்கொடியில்தான் புதுமைப்பித்தனின் துவக்ககால கதைகள் யாவும் வெளிவந்தன.
ஆற்றங்கரைப் பிள்ளையார்
ஆனாலும் புதுமைப்பித்தனின் மீது இன்றுவரையிலும் ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. புதுமைப்பித்தன் சமகால அரசியல் பிரக்ஞை அற்றவர். அவருடைய கதைகள் முழுக்க நம்பிக்கை வறட்சியை பிரதிபலிப்பவை. அவருடைய கதைகளுக்கு சமூகப்பயண் மதிப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை நோக்கியும், புதுமைப்பித்தன் யார் என்பதை பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்வது அவசியம் என்பதாலும் அவருடை ஆற்றங்கரைப் பிள்ளையார் என்கிற கதையையே ஒரு கதை எனும் இந்த தொடரின் முதல் கதையாக எடுத்துக்கொள்கிறேன்.
ஆற்றங்கரைப் பிள்ளையார் கதை இப்படி துவங்குகிறது. ஊழிக்காலத்திற்கு வெகுநாட்களுக்கு முன்பாக நடந்த கதையிது என்று துவங்குகிறார் புதுமைப்பித்தன். முதல்வரியே நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது. ஊழிக்காலம் என ஒன்று இருந்ததாக நம்மை நம்பச் சொல்கிறவர்கள் யார் என்கிற புரிதல் வருகிறது. அந்தக்கதை ஆற்றங்கரையில் நடக்கிறது. ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு அங்கு தனக்கு தன் அம்மையைப் போல பெண் வேண்டும் எனத் தேடிக் கொண்டிருந்த பிள்ளையாரைப் பற்றிய கதையல்ல இது. இது புராண இதிகாசங்கள் கவனிக்க தவறிய வேறு ஒன்றைப்பற்றிப் பேசுகிறது.
ஆற்றங்கரையில் ஒரு விரிந்த மேடைகட்டி அதன்மீது இந்தப் பிள்ளையாரைக் குடியேற்றுகிறார் பித்தன். சட்டென எழுத்தாளனுக்கு கதாபாத்திரங்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று தோன்றுமல்லவா? புதுமைப்பித்தன் இப்படி பெயர் வைக்கிறார். மேடைக்கு அவர் வைத்த பெயர் சமூகம். பிள்ளையாருக்கு அவர் வைத்த பெயர் மனிதன். மனிதன் என்கிற பிள்ளையாரை சமுகம் என்ற மேடையில் குடிவைக்கிறார் எழுத்தாளர். ஆற்றங்கரையின் வெட்டவெளியின் உக்கிர வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் உக்கிரத்தில் இருந்து பிள்ளையாரைக் காப்பாற்ற ஒரு யோசனை தோன்றுகிறது உலகத்தார்க்கு. அவர்கள்தான் சமூக மேடையில் மனிதன் என்கிற பிள்ளையாரை அமர்த்தியவர்கள்.இரண்டு மரங்களை மேடையின் இரண்டு பக்கங்களிலும் நட்டு வைக்கிறார்கள். அவர்கள் மரங்களை நட்டி வைத்தது மனிதனின் நன்மைக்காகத்தான்.
சமயமரம்
ஒன்று வேப்பமரம், மற்றது அரசமரம். புதுமைப்பித்தன் நினைவூட்டுகிறார். இடது பக்கத்தில் இருப்பது அரசமரம். அது ராஜமரம். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அது ராஜ்ஜிய மரம். அது அரசியல் அதிகாரம் குறித்தது. வலதுபக்கத்தில் இருப்பது வேப்பமரம். அது சமயமரம். சமயம் எனும் சொல்லிற்கு குறியீடாக வேப்பமரத்தை முன்வைத்திருப்பது ஏன் என்பதெல்லாம் தனியே பேச வேண்டிய மிக முக்கியமான பகுதிகள்.
சமய மரமும், ராஜமரமும் உலகம் எனும் ஆற்றுநீரை எடுத்து நீரூற்ற நீரூற்ற செழித்து வளர்கின்றன. இரண்டு மரங்களும் பிள்ளையாருக்கு துயரத்தில் அவரைத் தற்காத்துக் கொள்ள வைக்கப்பட்ட மரங்களே. செழித்து வளர்ந்த மரங்களால் பெரும் குடை போன்ற தோற்றம் உருவாகி வளர்கின்றன. நிழலின் குளிர்ச்சியில் மகிழ்ந்திருக்கிறார் மனிதன் என்கிற பிள்ளையார். காலம் சுழித்து ஓடுகிறது மரநிழலில் தங்கிய வித விதமான பறவைகள் எச்சங்களை பிள்ளையாரின் மீது இட்டுச் செல்கின்றன.
தமிழ்ச்சிறுகதை மேதை
நாற்றத்தில் இருந்து தப்பிக்கக்கவும், அழுக்கடையும் தன்னை மீட்டெடுக்கவும் எவரும் வரமாட்டார்களா என ஆற்றையே வெறித்துப் பார்க்கிறார் பிள்ளையார். தானே ஓடிப்போய் உலகம் எனும் பேராற்றில் குளித்து எழுந்தால் போதும். எல்லாமே சரியாகும் எனும் யோசனை மனிதன் என்கிற பிள்ளையாருக்கு வரவில்லை. மனிதனின் சிந்தனைப் போக்கினை நுட்பமாக ஒரு சிறுகதைக்குள் கடத்த முடியுமா? மேதைகளால் முடியும்.
புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதை மேதை. கால ஓட்டத்தில் விடுதலைக்கான யோசனை மனிதன் என்ற பிள்ளையாருக்கு வந்தபோது அவரால் ஆற்றுக்குப் போக முடியவில்லை. ஏன் தெரியுமா?. மனிதன் என்கிற பிள்ளையாரின் நலனுக்காக நட்டி வைக்கப்பட்ட மரங்களும் தனித்தனியே வளர்ந்து நிழல் கொடுத்தன.அதுவரை சிக்கலில்லை. இப்போது அதனதன் போக்கில் கண்கணிப்பின்றி வளரத் துவங்கின. அவற்றின் கிளைகளும் வேர்களும் பிள்ளையாரை இறுக்கிப் பிடிக்கத் துவங்கின. இடது காலை நகட்டவிடாமல் வேப்பரத்தின் கிளைகள் இறுக்கிப்பிடித்தால், வலதுகாலை அரச மரத்தின் கிளைகள் இறுக்கிப்பிடிக்கின்றன. இரண்டு மரங்களின் கிளைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைந்து மனிதன் என்கிற பிள்ளையாரின் கழுத்தை இறுக்கத் துவங்கியது. மூச்சே விட முடியாமல் திணறினார் பிள்ளையார்.
யார் விடுவிப்பது மனிதன் என்கிற பிள்ளையாரை என்பது உலகத்தாருக்கு புரிதல் இல்லாமலே நகர்கிறது காலம். ஆற்று நீரில் வரிசை, வரிசையாக முதுகிழவர்கள் வருகிறார்கள். ஆற்றுநீரை குடத்தில் நிறைத்து சமனத் தீர்த்தங்கரர் வருகிறார். காக்கை,குருவிகள் இட்ட எச்சங்களை கழுவுகிறார். கழுத்தையும், கையையும் சுற்றிய மரக் கிளைகளை விடுவிக்கவும் முயற்சி செய்கிறார்.
மூச்சு விடுவது போல தோன்றியதே தவிர மனிதன் என்கிற பிள்ளையாரால் முழுவதுமாக விடுபடமுடியால் தடுமாறுகிறார். புத்தர் வருகிறார். நீரெடுத்து வந்து மனிதனை சொஸ்தப்படுத்த முயற்சிக்கிறார். சின்ன சின்ன முன்னேற்றம் ஏற்பட்டு மூச்சுவிட முயற்சிக்கிறார். இருந்தாலும் இந்த இரண்டு மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து இறுக்கிப்பிடித்து மனிதன் என்கிற பிள்ளையாரை இயங்கவிடாமல் தடுத்தே வைத்திருக்கின்றன.
கனவு
புத்தனைத் தொடர்ந்து சிலுவையைச் சுமந்தபடி இயேசு வருகிறார். சகல பாவங்ளையும் உலகமெனும் ஆற்றுநீராரல் குளிப்பாட்டிப் பார்க்கிறார். அவரைத் தொடர்ந்து தொப்பியும் தாடியும் வைத்த பெரியவர் வருகிறார். அவரும் மனிதன் என்கிற பிள்ளையாரை மரங்கள் கட்டி வளர்த்திருக்கிற சிக்கலில் இருந்து மீட்கவும் காக்கை, குருவிகள் கொட்டி வைத்திருக்கும் எச்சங்களை கழுவித் துடைத்தும் முயற்சிக்கிறார். ஆனால் நித்தமும் இரண்டு மரங்களும் ஒன்றுடன் ஒன்று மூர்க்கமாக ஒன்றிணைந்ததால் அவை மனிதனின் கழுத்தை இறுக்குவது கூடுதலாகிறது.
ஊருக்குள் மரத்திற்குப் பிள்ளையாரா? பிள்ளையாருக்கு மரமா? எனும் தர்க்கம் நடக்கத் துவங்கியது எனும் வரியையும் புதுமைப்பித்தன் கதைக்குள் எழுதுகிறார். அத்தோடு கதையை முடிக்கவில்லை பித்தன். கதையின் கடைசியில் மனிதன் என்கிற பிள்ளையாருக்கு ஒரு கனவு வருகிறது. பிள்ளையார் தன்னளவில் பெரும் முயற்சி செய்கிறார். தானே முட்டி மோதி தன்னை இறுக்கிக் கிடந்த தளைகளை உடைத்து நொறுக்கி தட தடவென ஓடிப் போய் உலகமெனும் ஆற்று நீரில் முழுவதுமாக மூழ்கி அழுக்கு, எச்சங்களை கலைந்து சமூகம் எனும் மேடைக்குத் திரும்புகிறார் என கதையை முடிக்கிறார். உங்களைத் துயரங்களில் இருந்து மீட்க எந்த தேவதூதனும் வரப்போவதில்லை. மனிதனே நீயாகவே முயற்சித்தால்தான் விடுதலை என்பதை குறியீடாகச் சொல்கிறார் கதைக்குள்..
முதல் கதை
மதமும், அரசியலும் தனித்தனியே செழித்து வளர்ந்து மனிதர்களின் நல்வாழ்வுக்கும்,சமூக மேம்பாட்டிற்கும் பங்களிப்பு செய்ய வேண்டியவைகள். அவையிரண்டும் தனித்து வளரட்டும். இவையிரண்டும் சேர்ந்து இயங்கினால் மனிதர்களும்,சமூகமும் என்ன பாடு படுவார்கள் என்பதை குறியீடாகச் சொன்ன கதை ஆற்றங்கரைப் பிள்ளையார். 1930-களில் எழுதிய கதை. இது புதுமைப்பித்தனின் முதல்கதையும்கூட. தன்னுடைய முதல்கதையில் இந்தியச் சமூகத்தின் சமய வரலாற்றை எழுதிப்பார்த்தவர் அவர். மதமும் அரசியலும் சேர்ந்தியங்குவது மனித குலத்திற்கு கேடு எனும் நுண்ணிய அரசியல் கருத்தை தன்னுடைய முதல் கதையில் படரவிட்டவர் புதுமைப்பித்தன்.
கதையை நான் சொல்லியிருக்கிறேன்.கதையைக் குறித்து நீங்களும் சொல்லலாம்… (தொடரும்)




கட்டுரையாளர் புதுமைப்பித்தனின் ஒரு கதையை எடுத்துக்கொண்டு புதுமைப்பித்தனின் முழு ஆளுமையையும் விவரித்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்!