
கட்டுரையாளர் ச.சுப்பாராவ். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். வயது 61. எல்.ஐ.சியில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். நாவல், சிறுகதை, தொகுப்பு, கட்டுரை நூல்கள், மொழி பெயர்ப்புகள் என இதுவரை வெளியான படைப்புகள் 70.
சங்கீத் திலோங்கி துனியா ஹே…
இசைக்கு மொழி உண்டா? அரைகுறையாய் இசை கற்றுக் கொண்ட நாட்களில் இசைக்கு மொழி இல்லை என்றே நினைத்தேன். இல்லை என்பதை விட தேவையில்லை என்ற எண்ணம் மிக வலுவாக இருந்தது. இசையறியாத பாமரன் இசையை சொற்கள் மூலமாக, தானறிந்த மொழியின் வார்த்தைகள் வழியாக அணுகுகிறான். அதன் மூலம் புரிந்து கொள்கிறான். இசையைப் பயின்றவனுக்கு இசை வெறும் சப்தஸ்வரங்கள், தாளக் கணக்குகள் தான் என்று, நான் விபரமறியாத சிறுவயதில் நினைத்ததுண்டு. இசை தெரியாதவருக்கு
மலர்ந்து மலராத காலைப் பொழுதாக வளரும்விழி வண்ணமே,
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே,
நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி,
நடந்த இளம் தென்றலே, வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே,
என்றும்,
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா – உறவை
பிரிக்க முடியாதடா
என்றும் கண்ணதாசன் இனிய பலாச்சுளைச் சொற்களை தேனில் முக்கி, முக்கி எடுத்து, தங்கத் தட்டில் வைத்து நம் முன் படைத்திருந்தாலும், என் ஹார்மோனியத்தில் அந்த தேன்பலாச் சொற்கள் அனைத்துமே ரிகம கரி கரிஸ – ரிகம கரி கரிஸ – ரிகம கரி கரி ஸஸா. என்று நான்கைந்து ஸ்வரங்களுக்குள் சுற்றிச்சுற்றி அடங்கிவிடும் என்று இறுமாப்பாய் நினைத்த காலம் ஒன்று உண்டு. ஆனால், எல்லாவற்றையும் கற்றுத் தரும் காலம், அது அப்படி எளிதானதல்ல என்பதையும் கற்றுத் தந்தது.
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் என்ற பாட்டின் வரி வெறும் ஸரீ கமக ரிகரி ஸரிஸ நிதநி ஸஸா… மட்டும் தானா? அப்படி என்றால். அந்தப் பாட்டைக் கேட்கும் போது, எம்.எஸ்.சுப்புலட்சுமி போல வலது தோளைப் புடவைத் தலைப்பால் போர்த்திய, மைக் பிடித்த ஸ்ரீதேவி, அழுந்த வாரிய அவரது தலைமுடியைச் சுற்றி ஒளிவீசும் அந்த ரிம் லைட், பாட்டை ரசித்துக்கொண்டே பதிவு செய்யும் ரஜினி, அவ்வளவு ஏன், மஞ்சள் தொப்பி அணிந்த சுருளிராஜன் முகம் முதற்கொண்டு எல்லாம் என் மனதில் ஏன் தோன்றுகிறது? சரி, இவர்களாவது, அந்தப் பாடலோடு தொடர்புடையவர்கள்.
ஆனால், பாட்டைக் கேட்கும் போதெல்லாம், ஜானி திரையிடப்படும் போதெல்லாம் ஒரு முறை பார்த்து விடும் ரவி, ரஜினி என்ற பட்டப்பெயர் கொண்ட ராஜேஸ்வரி ஆகியோரின் நினைவும் ஏன் எனக்கு வருகிறது? ஒரு முறை ரவியோடு ஜானி பார்த்த ஜெயராஜ் தியேட்டர் இன்று இல்லாமல் போனது ஏன் துக்கத்தைத் தருகிறது? அந்த தியேட்டர் இருந்த மரங்களடர்ந்த அந்த சாலையின் அமைதி எங்கே போனது? என்ற ஏக்கம் ஏன் எனக்கு வருகிறது?
காரணம் அந்தப் பாடல் ஜீவனானது. முடிவில்லாத அந்த இசை நாதமென்பது வாழும் நாளெல்லாம் என் நினைவுகளால் என்னை வாழ வைப்பது. இராக பாவமும், அதில் சேர்ந்த தாளமும் என் மனதின் பாவம். என் நினைவுகளின் பாவம். 10 – 15 ஆண்டுகளுக்கு முன் செல்வம் மாஸ்டர் என்று ஒரு சிறுகதை எழுதினேன்.அதில், ‘நிலவோடு வான்முகில் விளையாடுதே‘ பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அண்ணாச்சி ராஜமாணிக்கம் கையில் மஞ்சள் பையோடு நடந்து வருவது மாதிரி இருக்கும். ‘அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்தது கதையா‘ என்று பானுமதி பாடும் போது. எஸ்.பி.கே சாரின் கம்பீரமான முகத்தில் ஒரு துயரின் சாயல் படிவது தெரியும், என்று எழுதியிருப்பேன். அந்தக் கதை சொல்லிக்கு ஏன் இப்படி ஒவ்வொரு பாட்டிற்கும், ஒவ்வொருவர் நினைவுக்கு வருகிறார்கள் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் எவ்வளவோ புரிகிறது.
‘நம்மிடம் இருப்பது ஒரே ஒரு ஆடுதான். அதை வெட்டித்தான் தலைக்கறி தனியாக, குடல் தனியாக, ஈரல் தனியாக என்று தனித்தனியாகப் பரிமாறுகிறோம். அது போலவே ஒரே ஒரு கதைதான். ஒரே ஒரு வாழ்வுதான்,‘ என்று எழுத்தாளர், நண்பர் சரவணன் சந்திரன் உயிர்மை இதழில் ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். அது இசைக்கும் பொருந்தும். ஒரே இசைதான். அது வெளிப்படும் சொற்களின் வழியாக நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகிறது. அந்த அனுபவங்களோடு தொடர்புடைய வெவ்வேறு மனிதர்கள் பற்றிய நினைவாகவும், அது நமது மனதின் அடுக்குகளில், மூலைமுடுக்குகளில் தங்கிக் கொள்கிறது. குறிப்பிட்ட பாடலைக் கேட்கும் போது, குறிப்பிட்ட மனிதரின் நினைவு வருகிறது. அதுபோலவே, குறிப்பிட்ட அந்த நபரைப் பார்க்கும் போதும், அந்த குறிப்பிட்ட பாடல் நினைவிற்கு வருகிறது.
என் பால்ய காலத்து நண்பன் மெர்குரி சங்கர் திடீர் திடீரென்று ஃபோன் செய்து, “நேத்து, சன் லைஃப்ல ஓம் பாட்ட போட்டாய்ங்கே..‘ என்பான். அந்தப் பாட்டு சிவாஜி அல்லது எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ் அல்லது எஸ்.பி.பி, சுசீலா அல்லது ஜானகி, எம்.எஸ்.வி அல்லது இளையராஜா என யார் பாடலாகவும் இருக்கக் கூடும். ஆனால். சங்கருக்கு அது என் பாட்டு. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு தியேட்டரில் இரவுக் காட்சி பார்த்து விட்டு, மதுரையின் ஆளரவமற்ற, நீண்ட, இருண்ட சாலையில், குளிரில் நடுங்கியபடி நடந்து வரும் போது, காதலிக்க அல்லது மறக்க நினைக்கும் ஒரு பெண்ணை நினைத்து மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ நான் பாடிக்கொண்டே வந்த பாடல். அதனால்தானே, இன்றும் பண்பலைகளில் சாங்கை இன்னாருக்கு டெடிகேட் செய்வதாகச் சொல்கிறார்கள் !
இசையை விஞ்சிய பாடல் வரிகள். பாடல் வரிகளை விஞ்சிய இசை. இரண்டையும் விஞ்சும் மனதின் ஏக்கம், நினைவுகள், விதவிதமான மனிதர்கள்.
மனிதர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக உணரச் செய்வது கலைகள்தான். அதில் முதன்மையானது இசை – திரையிசை. எழுதிய- இசைத்த – பாடிய- எடுத்த – நடித்த – ரசித்த – என எல்லோருமே வெல்லுகின்ற ஆட்டம் இசையில் மட்டுமே சாத்தியம் என்று கவிஞர் ஆத்மார்த்தி தனது தூவானத் தூறல் தொகுப்பில் குறிப்பிடுவார். அப்படி வென்ற பாடல்கள் பற்றி, நான் அறிந்த, நேசித்த நண்பர்களின் நினைவாக என் மனதில் நிரந்தரமாய்த் தங்கிவிட்ட சில பாடல்கள் பற்றிச் சொல்வதாக இந்தத் தொடர் அமையும். அந்தப் பாடல்கள் வெறும் ஏழு ஸ்வரங்களின் கலவையல்ல. ஏழுஸ்வரம் என்னும் மேடையிலே தமிழ் ஏறி நின்று விளையாடிய பாடல்கள். ஆம் ! திரும்பச் சொல்கிறேன். அவற்றில் தமிழ் வெறுமனே விளையாடவில்லை. நின்று விளையாடிய பாடல்கள்.
இசை என்பது மனதின் உலகம் !
சங்கீத் திலோங்கி துனியா ஹே ! ( தொடரும்)




சிறப்பான துவக்கம். அமர்க்களப் படுத்துங்கள், ஐயா!
NICE BEGINNING SAI ANNA.
மிக அருமையான, மனதுக்கு நெருக்கமான, உருக்கமான சொற்கள்..தொடரட்டும் இசைப் பயணம்..!
Sir Super
ரைட்டு! ஆட்டம் தொடங்கியாச்சு! ச ரி க ம…துரை! சாவித்திரில தொடங்கி ஶ்ரீதேவி! மூவீலாண்ட் என்ற ஒரிஜினல் பெயர் கொண்ட ஜெயராஜ் தியேட்டர், மதுரையின் மிக அழகிய தியேட்டர். கிளப்பி வுடுறீங்க… செய்ங்க!
இக்பால்
Excellent Rao. Great start on a subject my heart is after!! Your insight is enormous!