
தவெக கூட்டணிக்குள் பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிகவின் நிலை என்று பலர் கேட்கிறார்கள். சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விடுதலை சிறுததைகள் கட்சி ஒரு போதும் கூட்டணி இல்லை என்று நமது தலைவர் திருமாவளவன் முழங்கியுள்ளார். இப்போதும் கூறுகிறேன். அதற்கான வாய்ப்பில்லை.
தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான் அதனுடைய பிரகடனம். எங்களுக்கு பதவி முக்கியமல்ல. நம்முடைய தலைவர் எதை கட்டளையிடுகிறாரோ அந்த வேலையை செய்வதற்குத்தான் ஒரு அடிமட்ட தொண்டராக இருந்து இந்த இடத்திலே களமாடுகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் புறக்கணிப்பு பாதையில் நின்ற இயக்கம். எங்களுக்கு இந்த தேர்தல் பாதை முக்கியமல்ல. விடுதலை சிறுத்தைகள் விடுதலையை நேசிக்கக்கூடிய இயக்கம்.
நமது கொள்கையின் அடித்தளம் என்பது சாதி ஒழிப்பு. நமக்கு தேர்தல்கள் வரும்.. போகும். ஆனால் மக்களுடைய விடுதலைதான் சாதிய ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை, சனாதனத்திலிருந்து விடுதலை. இதுதான் நம்முடைய உயிர் மூச்சு” என்றார்.



