‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

சென்னையில் பிரபல இசை அமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

தமிழ் திரையுலகில் கானா பாடல்களுக்கு தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தவர் இசையமைப்பாளர் தேவா. கானா பாடல்களை இயற்றி இசையமைத்ததால் கானாவின் காட்ஃபாதர் என்று தேவா அழைக்கப்படுகிறார். கானா மட்டுமின்றி மென்மையான மெலடி பாடல்களுக்குச் சொந்தக்காரர் என்பதால், ‘தேனிசை தென்றல்’ தேவா என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள தேவா, 1989-ம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘வைகாசி பொறந்தாச்சு’, ‘சோலையம்மா’, ‘ஆத்தா உன் கோவிலிலே’ என கிராமப்புற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த தேவா பின்னாளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

முதலில் போஸ்- தேவா என்ற பெயரில் சந்திரபோசும், தேவாவும் இணைந்து இசைநிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பு தூர்தர்ஷன், பொதிகை தொலைக்காட்சியில் தேவா பணியாற்றினார். ஏராளமான பக்தி பாடல்களுக்கு இசையமைத்த தேவா, சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், தேவாவுக்கு இன்று (அக்.17) காலை 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தேனிசைத் தென்றல் தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதலமைச்சர் விஜய் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று ஆளுநர் அர்லேக்கர் தெரிவித்துள்ளார். நாயகர்களுக்கான மாஸ் பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *