
கதைகள் குறித்தும், எழுத்தைப் பற்றியும் எழுத்தாளர்கள் எழுதிச் சேர்த்த கதைகள் எண்ணிக்கையில் அடங்காதவை. நான் ஏன் இப்படி எழுதினேன் தெரியுமா? நான் ஒன்றும் சாதாரணமாக இந்தக் கதையினை எழுதவில்லை புரிஞ்சுக்கோங்க. இந்தக் கதைய எழுதி முடிக்கிறதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்திருச்சு தெரியுமா?. இப்படி கதைகள் குறித்து ஒன்னு ரெண்டில்ல நூற்றுக்கணக்கில் எழுத்தாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இருக்கிறார்கள்.. கதைகள் குறித்து நான் எழுத யோசிக்கும் போதெல்லாம் தொண்ணூறுகளின் துவக்கதில் இலக்கியப் புலத்தில் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சொற்றொடர் என்னுடைய நினைவுக்குளத்தில் இருந்து மேலேறி வருவதை தவிர்க்கவே முடியவில்லை.
புதிதாக கதை எழுத வந்த எழுத்தாளர் ஓருவர் “ சார் இதுதான் என்னோட முதல் கதை. படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்கன்னு” சொன்ன அடுத்த நொடியில் தமிழில் கவனம் பெற்ற எழுத்தாளர் இப்படிச் சொன்னார். “தம்பி இது உங்களோட ரெண்டாவது கதை. ஏன் தெரியுமா? உலகின் முதல் கதையை ஏற்கெனவே போர்ஹே எழுதிவிட்டார். நீங்க நானு, அப்புறம் இப்ப உலகம் முழுக்க எழுதிக்கிட்டு இருக்கிற எழுத்தாளர்கள் எல்லோருமே அவுங்களோட ரெண்டாவது கதையத்தான் எழுத முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க”. ஓ.கே.வா. எப்பிடியாவது உங்க ரெண்டாவது கதைய எழுதிருங்க.” சொன்னவரப் பார்த்து புதுசா கதை எழுத வந்த மனுசன் திகைச்சு நின்னுட்டாரு. பிறகு எப்பிடி கதை எழுத, அவ்வளவுதான் முடிஞ்சது சோலி.. இது மாதிரி விசித்திரமான கதைகளைப் பற்றிய கதைகளைக் கேட்டுட்டு ஒரு கதைய மட்டும் எழுதி வாசகராகவே சுருங்கி நின்ன பலரை எனக்குத் தெரியும். இப்படி கதை எழுதுவதைப் பற்றி தமிழில் எத்தனை சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கும். ஒரு நூறு கதைகளாவது இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஏன் இப்படி கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதைகளை எல்லாம் எழுதாவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது. எல்லாவற்றையும் கடந்து எழுதித் தொலைச்சிப் பழகிட்டோம். எப்படி விடமுடியும். எழுத்தும் கதையும் நம்மள சிக்குனு பிடிச்சுக்கிடறதும், அத நாம விடாம விரட்டிக்கிட்டே இருக்குறதும் ஒரு நூதன விளையாட்டு என எழுத்தாளர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.அந்த நினைப்பையே பலரும் கதைகளாகவும் எழுதுகிறார்கள். இப்போது மட்டுமல்ல நம்முடைய சிறுகதை முன்னோடிகளும் எழுத்தைப் பற்றி கதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். கு.ப.ரா சிறுகதை மெஷின் என்றே ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு மெஷின் இருக்கும். அதனிடம் கதையின் உருவத்தையும், மொழிக் கட்டமைப்பையும், உள்ளடக்கத்தையும் பற்றி ஒரு உள்ளீடு தந்துவிட்டால் போதும் அடுத்த நொடியில் சிறுகதை ஒன்று கையில் கிடைத்துவிடும். இந்த தீபாவளி மலர், பொங்கல் மலர்னு கதை கேட்கிற பத்திரிக்கைகளோட தொல்லையில் இருந்து உடனே தப்பிக்கலாம். இப்பிடி தன் கதையில் எழுதிய கு.ப.ரா மட்டுமல்ல, புதுமைப்பித்தன் துவங்கி இன்று கதைகள் எழுதிக் கொண்டிருப்பவர்கள் வரை பலரும் கலை குறித்தும் கதைகளைப் பற்றியும் சிறுகதைகள் எழுதுகிறார்கள்.
கலையின் மகத்துவம் என்ன?. அது நிகழ்த்திக்காட்டும் உளவியல் எது?. எத்தனை முறை எவர் எழுதிப் பார்த்தாலும் புத்தம் புதிதாக தன்னையே திறந்து கொள்ளும் விசித்திரமான வஸ்து கலை. அதிலும் ஒவியம்,சிற்பம்,இசை போன்ற நுண்கலைகளைக் குறித்து எழுதிடும்போது கதைகள் அடையும் கலையமைதி அலாதியானது. கலையின் போலிமையின் மீது பூசப்பட்டிருக்கும் வசீகர இருட்டைக் கலைத்து அகற்றி அசலான கலை மனம் பற்றி எழுத்தாளர் நர்சிம் எழுதிய மிக நுட்பமும், நூதனமுமான கதை சிற்பம். கலையின் அதீத கணங்களைக் கண்டடைவதில் உள்ள அனுபவத்தை வாசகருக்குள் நிறைத்திட்ட அபூர்வமான சிறுகதை.
எழுத்தாளர் நர்சிம் மதுரையெனும் புனைவுப் பெருநகரத்தின் குலப் பாடகன். இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்கள் பலரும் அவரவர்களின் பால்யகாலத்து ஞாபகங்களையே கதைகளாக எழுதினார்கள். மதுரையே நர்சிமின் பால்ய நிலம். மதுரைக் கதைகள் என தனித் தொகுப்பாக்கிடும் அளவிற்கு மதுரையின் நிலக்காட்சிகளை தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பவர் எழுத்தாளர் நர்சிம். அவருடைய பஃறுளி மதுரையைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட மிக அபூர்வமான நாவல். வலைதள எழுத்து எனும் ஒரு வகைமை உருவான காலத்தில் கதை எழுத வந்தவர் நர்சிம். அதன் காரணமாகவே தன்னுடைய கதைகளில் வாசிப்பு சுவாரஸ்யம் குறைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். தொடர்ந்து தமிழ்ச்சிறுகதைப் புலத்திற்கு சிறந்த பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பவர். அவருடைய கதைகள் யாவும் மனிதர்களுக்கு இடையேயான உறவுச் சிக்கல்களின் முடிச்சுகளை லகுவாக்கிடும் முயற்சியின் தளத்திலேயேதான் இயங்குகின்றன. நர்சிமின் சிறுகதை கதை பங்களிப்பில் தனித்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கதை சிற்பம். இந்த கதை நர்சிமின் தனித்த கதை மட்டுமல்ல, தமிழ்ச்சிறுகதைகளில் தனித்த கதையும்தான். .
கதையின் துவக்கம் எழுத்தைப் பற்றி ஐம்பது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஒருவருக்கும், அவருடன் விவாதமும் தர்க்கமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் மற்றொரு இளம் எழுத்தாளருக்கும் இடையே நிகழும் விவாதத்தில் தன்னைத் திறக்கிறது. எழுத்தாளர்கள் எப்போதும் தன்னுடைய படைப்புகள் குறித்த பெரும் நம்பிக்கை கொண்டே அவற்றை படைத்தளிக்கிறார்கள். சிற்பம் கதைக்குள் வருகிற எழுத்தாளர் சுமேந்திரன் தன்னுடைய முதல்கதை அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லையே எனும் பெரும் குறையை ஐம்பது வருடங்களாக சுமந்து கொண்டு அலைபவர். அந்தக் கதையைக் காகிதத்தில் கிளர்த்தி படர்ந்திடும் தருணங்களை ஒருநூறுமுறை தனக்குள் நிகழ்த்திப் பார்த்தும் கதை அவருக்குள் சிக்காமல் நழுவிப் போய்க்கொண்டு இருக்கிறதே எனும் கவலையை தன்னுடைய வாசகனான இளம் எழுத்தாளனிடம் பகிர்கிறார். இருவரும் மூர்க்கமாக தர்க்கிக்கிறார்கள். அதற்குள் தன்னைத் திறந்து கொள்ளும் கலையின் வசீகர கணங்களைக் கண்டடைந்த எழுத்தாளர் சுமேந்திரனுக்குள் அவருடைய முதல்கதை பெரும் விருட்சமாக ரூபம் கொள்கிறது. இது ஒன்றும் சாதாரண சிறுகதையல்ல. பெரும் நாவல் என்பதை உணர்கிறார். அதற்கான கச்சாவைத் தேடி சிற்பக்கூடம் ஒன்றிற்குச் செல்கிறார். அந்த சிற்பியை எழுத்தாளருக்கு அறிமுகம் செய்ததுகூட இளம் எழுத்தாளரே.

சிற்பக்கூடம் போய் வந்த அனுபவத்தையே கதையென காகிதத்தில் குறிப்பாக்கி எழுத்தாளர் சுமேந்திரனின் வழியாக நமக்குத் தருகிறார் நர்சிம். தான் எழுதப்போகும் தன்னுடைய கனவுப் படைப்பிற்காகவே எழுத்தாளர் சிற்பக்கூடம் தேடி வந்திருக்கிறார். அதிலும் அவர் எழுதிச் சேர்த்த எல்லா கதைகளும் கட்டுரைகளும் அயராத அவருடைய உழைப்பில் உருவானவை என நம்புபவர் அவர். ஒவ்வொரு கதையையும் தேடி தேடிச் சென்று கண்டடைவதை வழக்கமாகக் கொண்டவர் எழுத்தாளர் சுமேந்திரன். அதற்காக அவர் நிகழ்த்திய களப்பயணங்களைக் குறித்த பெரும் பெருமிதமே அவருக்கு உண்டு. அந்தச் சிற்பக்கூடத்தின் காட்சிகள் அவரை குலைத்துப் போடுகிறது.
நான் இங்கு வந்திருக்கக்கூடாது என தன் வாசக நண்பருக்கு குறிப்பு எழுதிடும் அளவிற்கு அவரை பதட்டமடையச் செய்தது எது என்பதனையே கதையின் அடுத்தடுத்த வரிகளில் நர்சிம் கண்டுபிடிக்கிறார். சிற்பக்கூடத்தில் தன்னைச் சிற்பமாக உருமாற்றித் திறந்து கொள்வதற்கு முன்பாக இருந்த சிலைகளின் நிலையை அவரால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. பூரணத்துவம் குறித்த வேட்கை கொண்ட எழுத்தாளர் நிறைவு பெற்றிருக்காத சிற்பங்களை அதன் அரைகுறை தோற்றங்களைக் கண்டு அச்சம் கொள்கிறார். எழுத்து என்பதே மனங்களுக்குள் உறைந்திருக்கும் மெய்மைகளைக் கண்டடைவதுதானே. சிற்பக்கூடத்திற்குள் ஒவ்வொன்றையும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் தனக்குள் யோசிப்பதாக கடக்கும் ஒற்றைவரி மிக முக்கியமானது. “நான் இப்போது சந்திக்கப்போவது உலகின் தலை சிறந்த சிற்பியை. நான் எழுதிக்கொண்டே இருப்பதால் வெளிஉலக நிகழ்வினில் அதிகம் கவலை கொள்வதில்லை என்று தோன்றுகிறது”.
இந்த சொற்றொடர் உணர்த்தும் இடம் மிக முக்கியமான வாழ்வனுபவத் தொகுப்பு. மாபெரும் எழுத்து மேஜிக்கை நிகழ்த்தியவன் நான் எனும் பெருமிதத்தோடு அலைந்து கொண்டிருக்கும் மனிதன் தனக்கு இதுகூட தெரியவில்லையே எனத் தடுமாறி நிற்கிற இந்த இடம்தான் கலையின் அதீத கணத்தை கதைக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. பூரணத்துவ விருப்பர் நம் எழுத்தாளர். அதனால்தான் முழுமை பெற்ற பெண் சிலையின் மீதான வசீகர மனநிலை அவருக்குள் இருந்து கண்ணீரை உகுக்கிறது. அசல் கலைஞன் முழுமையை எட்டித் தொட எத்தனிக்கும் வித விதமான கலையின் எத்தனிப்புகளைக் கண்டுபிடித்துவிடுவான். சுமேந்திரன் தடுமாறுகிறார். இது மட்டுமல்ல அவர் நான் இங்கு வந்திருக்கக்கூடாது எனக் குறிப்பு எழுதியதற்கான காரணம்.
உலகின் தலைச்சிறந்த சிற்பியென அவர் உருவாக்கி வைத்திருந்த மனப்பதிவும் கலைந்து போகிறது. பட்டு வேஷ்டி, பட்டு ஜிப்பா, வெற்றிலைக் குதப்பிய ஒரு முதிர்ந்த மனிதனையே சிற்பியாக தனக்குள் வரைந்து வைத்திருக்கிறார் எழுத்தாளர். அப்படியானவரே சிற்பி என்பதே அவருக்கு மட்டுமல்ல. நம்மில் பலருக்குமான புரிதல். கலை எப்பொழுதும் பொதுச்சமூகத்தின் முன் தீர்மானங்களை கலைத்து அடுக்கிடும் பேராற்றல் கொண்டது. சார் என எழுத்தாளரை அழைத்த பெண்குரலைக் கேட்டவுடன் வணக்கம் செலுத்தியவர். நீ சிற்பியோட மகளாம்மா, அப்பா எப்பம்மா வருவாரு என இயல்பாகக் கேட்கிறார். நான்தான் சார் சிற்பி எனும் அந்த இளம் பெண் சிற்பியின் சொல்லடுக்கை எழுத்தாளர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார்.
தன்னுடைய முன் தீர்மானங்கள் இற்று தன் கண்களின் முன்பாக விழுவதை எவருமே விரும்புவதில்லைதானே. அதிலும் எழுத்தாளர்கள்? அதனால்தான் அவர் நான் இங்கு வந்திருக்கக்கூடாது என கதைக்குள் குறிப்பு எழுதியிருக்கிறார். எழுபதைக் கடந்திருக்கும் மனிதர் எழுத்தாளர் சுமேந்திரன். பிரிண்டர்ட் ஷேர்ட்டும்,டெனிம் ஜூன்ஸுமாக தன்னைத் தற்காலப்படுத்திக் கொள்வதில் வேட்கையுடனும், தான் ஒரு நவீனன் எனக் காட்டிக் கொள்வதில் பெரும் விருப்பத்தோடும் இருக்கிறார். ஆனாலும் பாருங்கள் அவரால் ஒரு இளம் பெண் சிற்பியை இயல்பாக எதிர்கொள்ளவே முடியவில்லை. நவீனம் என்பது புறத்தோற்றத்திலா இருக்கிறது. நவீனமடையாத மனதைச் சுமந்தலையும் மனிதக்கூட்டத்தின் ஒரு குறியீடு எழுத்தாளர் சுமேந்திரன்.
அதன்பிறகு கதைக்குள் சிற்பக்கலையின் நுட்பங்களையும் நூதனங்களையும் சொல்லிக் கொண்டே போகிறார் இளம் சிற்பி. தன்னுடைய போதாமையை புரிந்து கொள்ளும் இடங்களில் எல்லாம் மனிதர்களுக்கு வார்த்தைகள் வசப்படுவதில்லை. அதனால்தான் சுமேந்திரன் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். அதிலும் தன்னைக் குறித்து தனக்குள் இருந்த பெருமிதத்தைத் தலைகுப்புற கவிழ்த்து விட்டு அடுத்தடுத்த விஷயங்களை நோக்கி அந்தப்பெண் நகர்ந்து போனதை ஒருவேளை இவரால் தாங்கியிருக்க முடியாது. “ சார் உங்க நண்பர் நீங்க வருவீங்கன்னு சொன்னதும் உங்களோட ஓர்கஸ வாசிச்சேன். பரவாயில்லை, ஒ.கே தான்” என்கிறாள். ஒரு மனிதனின் ஈகோ உடைந்து நொறுங்கிடும் இடத்தை எழுத்திற்குள் கொண்டுவந்து சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. சிற்பம் கதைக்குள் எழுத்தாளர் நர்சிம் லகுவாக அப்படியான இடங்களைக் கடந்து போகிறார்..
சிற்பி, சிற்பக்கூடம் இவை மற்றும் போதுமா இந்தக் கதைக்கு என யோசித்த எழுத்தாளர் நர்சிம் இந்தக் கதையை சமகால சூட்டிங் ஸ்பாட்டிற்குத் திருப்புகிறார். எழுத்தாளரை சினிமா படப்பிடிப்புத் தளத்தில் நிறுத்தி வைக்கிறார். அங்கும் கலை இயக்குனர் தன்னுடைய படைப்புகளை உருவாக்குவதை கண்ணுறுகிறார் எழுத்தாளர். அப்போதுகூட எழுத்தாளருக்குள் சிற்பியின் வசீகரத் தோற்றமும் சிற்பங்களின் பூரணத்துவமுமே நிழலாடுகிறது. படப்பிடிப்பு தளத்தின் கலைந்த காட்சிகளும். நீலமற்ற வானமும் அவரை அங்கு இருந்து துரத்துகிறது. கதையை வாசித்துக் கொண்டிருக்கும் நமக்கு மட்டுமல்ல. எழுத்தாளர் நர்சிமிக்கும் தெரிகிறது எழுத்தாளர் சுமேந்திரன் சிற்பக்கூடம் நோக்கித்தான் போகப் போகிறார் என்பது.
சிற்பம் கதையை அசாத்தியமான கதையாக உருமாற்றியது கதைக்குள் சுமேந்திரனுக்கும் இளம் எழுத்தாளனுக்கும் இடையே நடைபெறுகிற முரண்களின் மோதலும் அதனால் விளைந்த தர்க்கப் புள்ளிகளுமே. அது கலை என்றால் என்ன? கதை என்றால் என்ன? எனும் மன அவசத்தை வாசகருக்குள் விதைத்து நகர்கிறது.
–ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



