‘இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை’: தவெக மீது மு.க.ஸ்டாலின் புகார்

இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறையில் வலிப்பு வந்ததாக நடித்து காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடினர். இதனையடுத்து போலீஸாரின் தீவிர தேடுதலில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.

ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-ம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-ல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத (good for nothing) அரசாக இந்த மூடர்கூடத் தவெக அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியதற்கு “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு” என்று பாஜக முன்னாள் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். “தவெக அரசின் கையாலாகாத் தன்மையினால் தேனி சிறைக் கைதிகள் தப்பியோடி விட்டனர்” என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *