
தேனியில் 3 அடுக்கு பாதுகாப்பை மீறி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக 9 சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில் 9 சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்.27) சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம். ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் நேற்று (அக்.26) இரவு சிறைக் காவலர்களைத் தாக்கி 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தப்பியோடி கைதிகளைப் பிடிக்க தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறையில் இருந்து தப்பிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த பிரவீன்குமார், தேனியைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து மதுரை வந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி கைதிகள் தப்பியிருப்பது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதைக் காட்டுவதாக அவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைதிகள் தப்பியதற்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை சிறைத்துறை டிஐஜி முருகேசனும் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிறையில் இருந்து தப்பியோடிய 13 கைதிகளில் சிலர், தேனி மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்பதால் டிரோன்கள் மூலம் அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகள் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் 9498101570 அல்லது 9176104100 என்ற தொலைபேசி எண்களில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



