
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திமுக அதிமுக, தவெக, நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிலையில், மீண்டும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். பிப்ரவரி 28-ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் மதுரை தோப்பூரில் கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.



