
நடிகர் மன்சூர் அலிகான்
தமிழர்களுக்கு எதிரான கட்சிகளை நார் நாராக கிழித்து தொங்க விடுவோம் என்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.
சென்னையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவரவர் விகிதாச்சாரப் படியும், தமிழர்களுக்கு அனைத்து துறையிலும் தனியார் உட்பட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் மது பானக்கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். உழைக்கும் மக்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். டோல்கேட் வரி வசூலித்தல் கூடாது. தமிழர் நலனுக்கு புறம்பான கட்சிகளை எதிர்த்து வெகுதூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கிற ஏவுகணைகள் போன்று இருக்கும் எங்கள் ஆட்சி நல்லாட்சி அமைய பாடுபடுவோம். கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” தமிழர்களுக்கு எதிரான கட்சிகளை நார் நாராக கிழித்து தொங்க விடுவோம். தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே தமிழன் தான் ஆள வேண்டும். தமிழக மீனவர்களை யாரும் கைது செய்யக் கூடாது. இதை ஏற்பவர்களிடம் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் தனித்து போட்டியிட மாட்டோம்” என்றார்.



