
எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் வைகைச்செல்வன், செம்மலை, ராஜலட்சுமி ஆகிய முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு அந்த கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 23 ஆம் தேதி அதிமுக தரப்பில் முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 150 பெயர்களில் 17 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மரகதம் – பாப்பிரெட்டிப்பட்டி, சரோஜா – துறையூர், உஷாராணி – ஏற்காடு, ம.சக்தி – சீர்காழி,
பரிதா – குடியாத்தம், லீமா ரோஸ் – லால்குடி, தேன்மொழி – நிலக்கோட்டை, ஜெயசுதா – ஆரணி, ராணி – வந்தவாசி, விஜயா – விழுப்புரம், சத்திய பாமா – தாராபுரம், இளமதி சுப்ரமணியன் – திருவிடைமருதூர், சந்திரபிரபா- ஸ்ரீவில்லிபுத்தூர், கீர்த்திகா – திருவாடனை, சத்யா – விளாத்திகுளம்,
மரகதம் குமரவேல்- மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் களம் காண்கின்றனர்.
கடந்த முறை அதிமுகவில் வெற்றி பெற்ற 66 சட்டமன்ற உறுப்பினர்களில் 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 150 தொகுதிகளில் ஒருவர் மட்டுமே இஸ்லாமிய வேட்பாளராக இருக்கிறார். அதன்படி, பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். சையது சுல்தான் சம்சுதீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செம்மலை ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்த தனபால், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் ஆகியோரின் பெயரும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.



