
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டில் மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் (எஸ்ஐஆர்) சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதில், சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடியாக குறைந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 10-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரி சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி நிறைவடைந்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2026 அன்று வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளர்கள்: 2,66,63,233, பெண் வாக்காளர்கள்: 2,77,06,332, மூன்றாம் பாலினத்தவர்: 7,191 என மொத்தம்: 5,43,76,756 வாக்காளர்கள் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், ஆண்கள்: 2,77,38,925, பெண்கள்: 2,89,60,838, மூன்றாம் பாலினம்: 7617 என மொத்தம் 5,67,07,380 பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 23.30 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார்.



