
நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா பிரதமராகிறார்.
போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்தது
நேபாளத்தில் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் நிா்வாகச் சீா்கேடுகளுக்கு எதிராக கடந்த ஆண்டு போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது. இதில் 77 பேர் உயிரிழந்தனர். இதனால் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனால் அதிபா் ராம்சந்திர பௌடேல் நாடாளுமன்றத்தைக் கலைத்து, இடைக்கால பிரதமராக சுசீலா காா்க்கியை நியமித்தாா்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்த நிலையில், நேபாளத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடி தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவார்கள். அதனால் பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை. நாடாளுமன்றத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.
ராப் பாடகர்
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயராக பணியாற்றி இளைஞர்களின் நன்மதிப்பை பெற்ற ‘ராப்’பாடகர் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் வியாழனன்று நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. நேற்று(மார்ச் 6) இரவு நிலவரப்படி மொத்தமுள்ள 275 இடங்களில் நேரடித் தோ்தல் நடைபெற்ற 165 தொகுதிகளில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) மூன்று வெற்றிகளுடன் 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. குறிப்பாக, காத்மாண்ட் பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளா்களே முன்னிலை பெற்றனா்.
புதிய பிரதமர்
கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியை (ஆர்எஸ்பி) சேர்ந்த பாலேந்திர ஷா பாலன், கே.பி.சர்மா ஒலியின் சொந்த தொகுதியான ஜாப்பா 5-ல் அவரை ட ஐந்து மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரது வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா, ருக்கும் கிழக்கு-1 தொகுதியில் வெற்றி பெற்றாா். ககன் தாபா தலைமையில் களமிறங்கிய நேபாளி காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் 13 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றது. கே.பி.சா்மா ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சி 10 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வெற்றியுடன் 7 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்றன. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், இறுதி முடிவுகள் வெளியாவது தாமதமாகும் எனத் தெரிகிறது. தேர்தல் மூலம் இளைய தலைமுறை வசம் ஆட்சி அதிகாரம் முதல் முறையாக செல்கிறது.



