வானதி சீனிவாசன் மீது பகீர் குற்றச்சாட்டு: உயிருக்கு போராடும் பாஜக தொண்டரின் வீடியோ வைரல்

உயிருக்குப் போராடும் தனக்கு வானதி சீனிவாசன் எந்த உதவியும் செய்யவில்லை என்று பாஜக தொண்டர் கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் கே.ஜி. மருத்துவமனை உள்ளது. இதன் அருகே தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்பனை செய்து வருபவர் கடலை பாலன். அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலராக சேவையாற்றி வந்தவர். இந்து இயக்கங்களிலும் பல்வேறு சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பாஜகவிலும் கட்சி பொறுப்புகளை வகித்து வந்தார்.

இந்த நிலையில் கடலை பாலனுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழக்க, மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக பல லட்ச ரூபாய். மருத்துவ செலவாகியுள்ளது. இதற்காக பல முக்கிய தலைவர்களை அணுகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் உயிருக்குப் போராடி வரும் கடலை பாலன், தனது மருத்துவச் செலவுகளுக்காக பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனை பலமுறை நேரில் அணுகியும் எந்த உதவியும் அவர் செய்யவில்லை என்றும், குறைந்தபட்சம் ஆறுதல் கூட கூறவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தான் உதவி கேட்டுச் செல்லும் போதெல்லாம் “பி.ஏ. வந்து உங்களைப் பார்ப்பார்” என்று கூறி தன்னை வானதி சீனிவாசன் அலைக்கழித்ததாக கூறியுள்ள கடலை பாலன், தனது வீட்டின் அருகே பிரச்சாரத்திற்கு வந்த போது அவர் எட்டிப்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், “உண்மையான கட்சித் தொண்டனுக்கே சிறு உதவி கூடச் செய்யாத இவர்கள், தொகுதி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்?” என்று கடலை பாலன் எழுப்பியுள்ள கேள்வி தற்போது தனியார் யூடியூப் சேனல் வீடியோ மூலம் வைரலாகி வருகிறது. கட்சிக்காக உழைத்த தொண்டரை வானதி சீனிவாசன் கைவிட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *