
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்கிறதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த முறை நடிகர் விஜய்யின் தவெக புதிதாக களமிறங்குகிறது. இதனால் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தன்று தொகுதி பேச்சுவார்த்தை பேசி முடிக்கப்படும் என்று அதிமுக எதிர்பார்த்தது. ஆனால், அன்றைய தேதியில் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதையடுத்து கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அவர், ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்எல்ஏ தான் உள்ளார். எனவே அந்த மாதிரியான கோரிக்கைகளை நாங்கள் எழுப்பவில்லை என்றார். அதே போல முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்டுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன் அத்தகைய எந்த தொகுதிகளையும் நாங்கள் அதிமுகவிடம் கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.



