
அண்ணாமலை
நத்தம் அருகே இளைஞர் உடல் கல் குவாரியில் மீட்கப்பட்டதற்கு திமுக எம்எல்ஏ மீது அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, 10 நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர் உடல், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிக்கிறது.
ஏற்கெனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி தாக்குதல் நடத்திய காணொலி வெளியாகியிருந்தது. ஆனால், திமுக எம்எல்ஏ என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, ஒரு இளைஞர் உயிர் பறிபோயிருக்கிறது. இது விபத்தா அல்லது கொலையா என்பது குறித்த முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். எனவே, இந்த குவாரி நிர்வாகம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



