நடுக்கடலில் பற்றி எரியும் அமெரிக்கா, பிரிட்டன் கப்பல்கள்… ஈரான் பதிலடி!

நடுக்கடலில் எரியும் எண்ணெய் கப்பல்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சொந்தமான மூன்று எண்ணெய் டேங்கர்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளன.

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளாக தொடர்கிறது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நாசர்சாதே மற்றும் ராணுவத் தளபதி முகமது பாக்பூர் உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அத்துடன் ஈரானில் முதல் 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்க பயன்படுத்திய பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளத்தை தாக்கியதாகவும் அந்த மையம் கூறியுள்ளது. இஸ்ரேலும் ஈரான் மீதான தனது தாக்குதலை தொடர்கிறது.

பதிலடி கொடுக்கும் ஈரான்
ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சில தளபதிகளை இழந்தாலும் எங்கள் திறன் குறையவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள ஈரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) ஏவுகணைகள் மூலம் அந்த 3 கப்பல்களையும் தாக்கியுள்ளது.

560 அமெரிக்கர்கள் பலி
குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதன் அதிகாரப்பூர்வமான செபா நியூஸில் தெரிவித்துள்ளது. அதில், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமான தளம், முகமது அல்-அஹ்மத் கடற்படை தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை கட்டளை மற்றும் காப்பு மையம் தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பஹ்ரைனில் உள்ள மற்றொரு அமெரிக்க தளம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் 560 அமெரிக்கர்கள் பலியாகியுள்ளதாக ஐஆர்ஜிசி கூறியுள்ளது, ஆனால் அமெரிக்கா அதை உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. அதில், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கூட்டுத் தலைமையகம் உள்ளிட்டவை தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பட்டியலிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்த நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் செயலாளர் ஜெனரல் ஆர்செனியோ டொமிங்குஸ், கப்பல் நிறுவனங்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறும், முடிந்தவரை பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *