
ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம்.
அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசியது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதுகுறித்து விவாதிக்கக் கூடாது என உள்துறைச் செயலாளர் கூறுவது கண்டிக்கத்தக்கது. இவரைப் போன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்ற முடியும்?

நடிகை நயன்தாரா.
ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் வளங்களைக் கொள்ளையடித்துள்ள இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் இறுதி வாய்ப்பு இது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட இதற்குப் பொறுப்பான அனைவரும் புழல் சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார் முதலமைச்சர். ஆமாம், நயன்தாரா வேண்டும். முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?நயன்தாராவை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள். முதலமைச்சர் நிறைவேற்றுவாரா? ஆட்சி போன பிறகு சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஐந்து ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். நடிகை நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



