செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்: கரூர் வழக்கில் திடீர் திருப்பம்!

கரூர் சம்பவம் தொடர்பாக மார்ச் 17-ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.

கரூர் சம்பவம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில்,, கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை வேகம் எடுத்துள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என்று சமூக வலைதளங்களில் தவெகவினர் பலரும் வதந்திகளை பரப்ப தொடங்கினர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கரூர் திமுக அலுவலகத்தில் செந்தில் பாலாஜி, வீடியோ ஆதாரங்களுடன் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்
இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரிடம் சிபிஐ 2 நாட்கள் விசாரணை நடத்தியது.. அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் இரண்டு முறை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். அத்துடன் மார்ச் 10-ம் தேதி (இன்று) சிபிஐ தரப்பில் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் பணி காரணமாக விஜய் விலக்கு கோரி இருக்கிறார். இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரில் ஆஜராக முடிவு
இந்த நிலையில் சிபிஐ சம்மன் தொடர்பாக செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ” கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என்று” பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *