
சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டதால் தான் தேர்தல் ஜனநாயகமாக நடக்கும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
சென்னையில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகளில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி கோரி தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் தவெக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விஜய் பரப்புரைக்கு நேற்று இரவு போலீஸார் அனுமதி வழங்கினர்.
அந்த அனுமதியில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பரப்புரை செய்து முடிக்கவும், தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பரப்புரை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பரப்புரை செய்து முடிக்க போதுமானதாக இருக்காது என்பதால் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை இன்று (ஏப்ரல் 6) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டதால் தான் தேர்தல் ஜனநாயகமாக நடக்கும். தியாகராயநகரில் எங்கள் தலைவர் விஜய் 2 மணி முதல் 6 மணி வரை பரப்புரை செய்ய முதலில் அனுமதி அளித்தனர். ஆனால், சில மணி நேரங்களிலேயே 1 மணி நேரம் தான் பரப்புரை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
விஜய் பரப்புரை செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் காவல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் உள்ளார். சென்னையில் விஜய் பரப்புரை செய்ய முடியாத அளவிற்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் போய் முறையிட உள்ளோம்” என்றார்.



