
அண்ணாமலை.
இல்லாத இந்தி திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லி விட்டுச் சென்றாரா என்று முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தி திணிப்பு
திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கர்தவ்ய த்வார் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புரியாத வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
“}மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் என, உண்மையான மக்கள் பிரச்னைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



