மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவார்களா?: இபிஎஸ்சை சாடிய மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கும் எந்த வாக்குறுதியையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. மண்குதிரையை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்தரங்கம்
சென்னையில் இன்று (பிப்ரவரி 23) தனியார் தொலைக்காட்சியின் கருந்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,” நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் கொள்கை முகமாக 75 ஆண்டுகள் கடந்த மாபெரும் அரசியல் இயக்கமாக, மக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திசைகாட்டியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களை வழங்கியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று, வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்வோம். திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பை ஏற்கும் போதெல்லாம் இதை மனதில் வைத்துதான் மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

முடக்க முயற்சி
தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களால் 11.19 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சியை சாதிக்க முடிந்துள்ளது? எப்படிப்பட்ட சூழலில் நாங்கள் சாதித்திருக்கிறோம்? ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் கொஞ்சம் கூட மதிப்பு தராத பாஜக ஆட்சி ஒன்றியத்தில் ஆளுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை எந்த அளவிற்கு வஞ்சகத்தோடு அவர்கள் அணுகுகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆளுநர்கள் மூலமாக நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பதுவரை அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டும்தான் அவர்களுக்குத் தெரிந்த பாலிடிக்ஸ்.

அவமானப்பட்டு நிற்கிறார்கள்
இதையெல்லாம் அரசியல் தளத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, வளர்ச்சி அரசியல் என்றால் தமிழ்நாட்டைப் பாருங்கள் என்று வளர்ச்சி அரசியலில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்பிற்கான வளர்ச்சி அல்ல; எல்லோருக்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சி. பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திராவிடர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லோரையும் உயர்த்தும் அரசியலை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் செய்துள்ளதுபோல் எங்கள் திட்டங்களை வேறு எந்த மாநிலங்களும் செய்திருக்கிறார்களா? தமிழகத்தில் எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒருவராவது நமது அரசின் திட்டங்களில் பயனடைந்திருப்பார்கள். உண்மையான அரசியல் என்றால் என்ன என்று மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டும் செயல்பாடுகள் பாஜகவை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. அவர்களது சதி அரசியல் அம்பலமாகி அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

வாஷிங் மெஷின் அரசியல்
பாஜகவின் பேட்ட்ன் என்ன என்று தி.மு.க. மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டுவரப் பயன்படுத்திக்கொண்ட ‘வாஷிங் மெஷினை’, இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்களின் என்டிஏ . கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளானவர்கள். 10 பேர் மேல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் (DVAC) வழக்குகள் உள்ளது. ஆனால், கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் சில பேர் மேல் எஃப்ஆர் . கூட பதிவு செய்ய விடாமல் நிறைய ஆண்டுகளாக ஆளுநர் மூலமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

மண் குதிரை
இந்த லட்சணத்தில், இப்போது ஈ.டி, ஐ.டி, சிபிஐ ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள். என்னதான் பாஜக, ஈ.டி, ஐ.டி, சிபிஐ என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம். பாஜக உள்ளே நுழைந்தால், எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதைதான் இப்போது அண்மையில் மகாராஷ்டிராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாநில கட்சியை உடைத்து ஆட்சிக்கு வந்த அவர்கள், இப்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்திருக்கிறார்கள். மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 லட்சம் பெண்களை நீக்கியிருக்கிறார்கள். இதைதான் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ‘ட்ரோஜன் குதிரை’ தான் அதிமுக. அதனால்தான் பழனிசாமி அவர்கள் வழங்கும் எந்த வாக்குறுதியையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. மண்குதிரையை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா, நிச்சயம் மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *