
துரைமுருகன்
சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் அதிகாரம், அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முன்னெடுத்தது. இதன் காரணமாக கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், திமுக மீது கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன் வைத்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகார் செய்தார். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த நவம்பர் மாதம் காங்கிரஸ் குழு அமைத்தது. ஆனால், திமுக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்படவில்லை. இந்த நிலையில், திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்த ஆரம்பித்தது.
இதனையடுத்து பிப்ரவரி 22- ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக அறிவித்தது. ஆனால், யார் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்கள் என்ற விவரம் வெளிடப்படவில்லை. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவை திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழு தலைவர் டி.ஆர்.பாலு (திமுக பொருளாளர்), குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர்), திருச்சி சிவா (துணைப் பொதுச்செயலாளர்), ஆ.இராசா (துணைப் பொதுச்செயலாளர்), ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர்) எ.வ. வேலு (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



