தோழர் ஆர்.நல்லகண்ணு காலமானார்

ஆர்.நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101.

இது தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது.

பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு அவர்கள் 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லகண்ணு மறைவிற்கு பல்வேறு கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 டிசம்பர் 26-ம் தேதி பிறந்தவர் ஆர்.நல்லகண்ணு. அவரது 15 வயதில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மாணவராக இருந்த போதே பங்கேற்றதால் கைது செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த போதும் அவர் போராடினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக 13 வருடங்கள் பணியாற்றினார். மேலும் 25 ஆண்டுகால விவசாயித் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். எளிமையான வாழ்வுக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த ஆர்.நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கியது. தாமிரபரணி நதியில் நடைபெறும் மணல்கொள்ளைக்கு எதிராக ஆர்.நல்லகண்ணு நடத்திய சட்டப்போராட்டம் குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *