
மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா என்று விஜய்யை இயக்குநர் அமீர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. கரூரில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ள விஜய், தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். ஆனால், அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், சென்னையில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே நிற உடையில் விஜய்யும், த்ரிஷாவும் ஜோடியாக கலந்து கொண்டனர். இதற்கு விஜய் ஆதரவாளராக இருந்த பலரே கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் மகளிர் தினவிழா இன்று(மார்ச் 7) மாலை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தவெகவின் மகளிர் தினவிழா குறித்து இயக்குநத்ர அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில்,” தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



