
‘ஜனநாயகன்’படத்தை பகிர வேண்டாம் என்று இயக்குநர் ஹெச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. அவரின் கடைசிப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஹெச்.வினோத் இப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் உள்ளிட்ட பிரச்சினைகளால் நான்கு மாதங்களாகியும் படம் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில் நேற்று இரவு ‘ஜனநாயகன்’ படத்தின் அறிமுகக்காட்சி, கிளைமாக்ஸ் கட்சி உள்ளிட்ட முக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தடுத்து நிறுத்த படத்தை தயாரித்த கேவிஎன் புரடொக்சன்ஸ் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படம் முழுவதும் தற்போது இணையதங்களில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே அது கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதைப் பகிராமல் ஆதரவளியுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படக்காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிரவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என்றும்.படக் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், அதனை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை பாயும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



