
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஏஎன்எஸ் (அக்னி நியூஸ் சர்வீஸ்) நிறுவனம் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா- ராம்தாஸ் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஏஎன்எஸ் (அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம்) நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏஎன்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ” தமிழ்நாட்டில், பிப்ரவரி 7 முதல் மார்ச் 12-ம் தேதி வரை பொதுமக்களை சந்தித்து கருத்துகணிப்பு எடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 44.1 சதவீதம் வாக்குகள் பெறும். அதிமுக 38.5 சதவீத வாக்குகள் பெறும். தற்போதைய நிலையில் அதிமுகவைவிட திமுக கூட்டணி 6.4 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறும். இதன் மூலம் திமுக கூட்டணி 44.9 சதவீதம் வாக்குகளைப் பெறும், அதாவது சுமார் 180 தொகுதிகளில் வெற்றி பெறும்.

அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம்
கடந்த 2019-ம் ஆண்டு முதலே திமுகவிற்கு பெண்கள் வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான 54 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தவெகவிற்கு நகர் புறங்களில் மட்டும் ஆங்காங்கே வாக்குகள் உள்ளன. சென்னை மாநகரில் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் தவெகவை நோக்கி நகர்கின்றன. வேளச்சேரியில் தவெகவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைக்கும். சீமானின் நாம் தமிழர் கட்சி 4.8 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும். இதர கட்சிகள் மற்றும் நோட்டா ஆகியவற்றுக்கு 2.1 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும். மேற்கு மாவட்டங்களில் கடந்த முறை அதிமுக அதிக இடங்களில் வென்றது. இந்த முறை திமுக கணிசமாக வெல்லும். மேற்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் திமுக 32 தொகுதிகளிலும், அதிமுக 18 இடங்களிலும் வெற்றி பெறும். தெற்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் திமுக 42, அதிமுக 16 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளது. மத்திய மண்டலத்தில் 37 தொகுதிகளில 35 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெறும். வடக்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் திமுக 35 தொகுதிகளிலும், அதிமுக, 17 தொகுதிகளில் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அக்கட்சி இப்போது வெற்றி பெறும் சூழல் உள்ளது” என்றனர்.



