
சென்னை அண்ணா அறிவாலயம்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நாளை நடைபெறாது என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஒருபுறம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சியினரிடம் திமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வேட்பாளர்கள், நாளை (மார்ச் 21) நடைபெறவிருந்த நிலையில் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை நடைபெற இருந்த திருச்சி (வடக்கு, மத்திய, தெற்கு), தஞ்சை (தெற்கு, மத்திய), பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான நேர்காணல் மார்ச் 23-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். நாளை மாலை நடைபெற இருந்த புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 23-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.



