
திருச்சியில் உள்ள சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று 3 மணியளவில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெற உள்ளது.
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் இந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இம்மாநாட்டிற்காக 650 ஏக்கர் பரப்பளவில் 9 நுழைவாயில்களுடன் பிரமாண்ட மாநாட்டு மேடை மற்றும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 200 ஏக்கரில் தொண்டர்கள் அமர்வதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அத்துடன் 50,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 15 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு செல்வதற்காக மேப்புடன் கூடிய க்யூஆர் கோடு அனுப்பப்பட்டுள்ளது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால், வாகன நிறுத்தும் இடங்கள் தெரியும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
மேலும் மாநாட்டுத் திடலில் 168 இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. 3.60 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 48 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்டில் அடங்கிய பை வழங்கப்படுகிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு காலம் என்பதால், முஸ்லிம்கள் தொழுகை நடத்த வசதியாக தனி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி வருகிறார். மாநாட்டு வளாகத்தின் முகப்பில் உள்ள 100 அடி உயரகொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றுகிறார். மாநாட்டு அரங்குக்குள் காரில் நின்றவாறு நிர்வாகிகள் அளிக்கும் வரவேற்பை ஏற்றுக் கொண்டவாறே மாநாட்டு அரங்குக்குள் செல்கிறார். அங்கு அவர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டைப்போல இந்த மாநாட்டிலும் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



