
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கவுன்சிலர் பிரபாகரன்.
இண்டிகோ விமானப் பணிப்பெண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு பிப்ரவரி 25-ம் தேதி இண்டிகோ விமானம் சென்றது. இதில் திருவள்ளூர் நகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும் வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணித்தனர். இந்த விமானத்தில் அனாகாபுத்தூரில் வசித்து வந்த 25 வயதான பணிப்பெண் வேலை செய்து வந்தார். அவரிடம் பிரபாகரன், தியாகு ஆகிய இருவரும் சைகை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்..
இதன் பின் திடீரென அந்த பெண்ணின் மீது கைவைத்து தொல்லை கொடுத்துள்ளனர். இது தொடர்தபாக தனது உயர் அதிகாரியிடம் அந்த பெண் தகவல் தெரிவித்தார். இதன் பின் மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன், தியாகு ஆகியோரிடம் விசாரணை செய்துள்ளார். இதன் பின் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று போலீஸார் அனுப்பியுள்ளனர்.
ஆனால், போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர்கள் இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரபாகரனும், தியாகுவும் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தின் சென்னை வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையம் சென்ற போலீஸார், விமானத்தில் இருந்து இறங்கிய பிரபாகரன், தியாகு ஆகியோரை கைது செய்தனர்த. இவர்கள் இருவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய திமுக கவுன்சிலார் பிரபாகரனுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



