மக்கள் நீதி மய்யத்துடன் திமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், கமல்ஹாசன் எம்.பி

சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யத்துடன் திமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளிலும் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நிறைவடையாமல் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்பட 21 கட்சிகள் உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து நிறைவு செய்ய திமுக முயற்சி செய்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன், திமுக இன்று (மார்ச் 19) இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. முதல் கட்டப் பேச்சுவார்த்தையில், மக்கள் நீதி மய்யம் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், புதிதாக கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால், அந்த அளவு தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை உள்ளதாக திமுக கருதுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளார். எனவே, இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யத்திற்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே, மக்கள் நீதி மய்யத்துடன் இன்று தொகுதி பங்கீட்டை முடித்து விட திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *