
பொதுவாகவே ஆவணப் படங்கள் பார்ப்பதற்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்துபவை,போரடிப்பவை, மிக நிதானமாய் நகர்பவை,பொறுமையை சோதிப்பவை.பொதுப் புத்தியில் படிந்திருக்கும் இந்தக் கருத்தியலை முற்றாக உடைத்துவிட்டு, மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆவணப்படம் தான் ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’..
வாக்குமூலங்கள்
ஒரு ஆவணப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணமாய் வந்திருக்கிறது. மதவெறியர்கள் வைத்த நெருப்பால் தீப்பிடித்துக் கொண்டிருக்கும் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு,மத நல்லிணக்கத்திற்காக, மக்கள் ஒற்றுமைக்காக மிகக் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கிறது. அதற்காக இவர்களின் திட்டமிடலும், செய்நேர்த்தியும் படத்தை பிரமாதப்படுத்தியிருக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சிக்கந்தர் தர்ஹா, காசிவிசுவநாதர் ஆலயம்,சமணர் படுகைகள், உச்சி பிள்ளையார் கோயில், குதிரைச்சுனை, நெல்லித்தோப்பு என மலையின் நிலவியல் அடையாளங்கள், அதன் வரலாறுகளை சொல்லி, பிரச்னை எங்கிருந்து யாரால் துவக்கப்பட்டது என்பதை, எதிரியின் வாயிலிருந்தே வாக்குமூலங்களை பெறுகிறார்கள்.

அவர்கள் திரிக்கும் ஒவ்வொரு பொய்க்குமான காட்சிகளை ஆதாரங்களோடு முன் வைத்து, மதவெறியர்கள் பரப்பும் வதந்தி என்னும் பெருநெருப்பின் மீது நீரையள்ளி ஊற்றுகிறார்கள். முதலில் தீபத்தூணில் தான் விளக்கேற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள், மெல்ல சிக்கந்தர் தர்ஹாவின் தூண்கள் போன்ற அமைப்பை சுட்டிக்காட்டி, இது இந்துக்களின் கோயில் அதை அபகரித்து விட்டார்கள் மீட்க வேண்டும். என்று நெருப்பை பற்ற வைப்பதை,பொய்யென்று முறியடிக்க தமிழ்நாடு முழுவதும் மட்டும் அல்ல, கேரளாவிலும் கூட போய் பழமையான தர்ஹாக்கள், 13-ம் நூற்றாண்டில் இருந்து கட்டப்பட்ட தர்ஹாக்கள் மசூதிகளின் கட்டட கலையை படம் எடுத்து வந்து, சங்கிகளின் செவிட்டில் அறைந்து பொய்யை போட்டு உடைக்கிறார்கள்.
அளவைக்கல்
தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை அதன் வழியே காட்சிப்படுத்துகிறார்கள். கீழக்கரை ஏர்வாடி தர்காவில் ஒரு நாளின் மூன்று வேளைகளிலும் நாதஸ்வர மேளதாள இசை முழங்குவது புதிய தகவலாக இருக்கிறது. காளியம்மன் கோயில் வளாகத்திற்குள் ஒரு தர்ஹா இருப்பதும், காளி கோயில் பூசாரி அதற்கு பூஜை செய்வதும் வியப்பேற்படுத்துகிறது. அடுத்து தீபத்தூண்தான் என்று இராம சீனிவாசன் சாதிக்க, கேள்வியின் சூடு ஆறுவதற்குள் வாஞ்சிநாதன் ஆதாரத்துடன், அது நில அளவைக்கல்தான் என்று நூற்றாண்டு கால ஆதாரத்தை அள்ளிப் போடுகிறார். இப்படி ஒரு பொய், அதை மறுக்கும் உண்மை என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

கந்தூரி கொடுக்கும் வழக்கமே இல்லை என்று வழக்கம் போல இந்துத்துவவாதிகள் கயிறு திரிக்க, அது பொய்ச் செய்தியென்று இந்து மூத்த குடிமக்களை பேட்டியெடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். கறி சாப்பிட்ட முருகனையே சக்கரைப் பொங்கல் சாப்பிட வைத்த பார்ப்பனியக் கூட்டத்தின் சூழ்ச்சிக்கு கந்தன் இரையாக்கியிருக்கலாம். ஆனால் சிக்கந்தரின் கந்தூரி இரையாகாது. எனது சொந்த அனுபவம் 25 வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் குழந்தை பிறந்ததற்காக, சிக்கந்தர் மலையில் ஆடு பலியிட்டு எங்களுக்கு விருந்து கொடுத்தான். சாப்பிட்ட அனுபவம் இருக்கின்றது. 1992-ல் பாபர் மசூதி இடிப்பு அதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் கும்பல் இந்தியா முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள தர்ஹா மசூதிகளில் 18-வது இடத்தில் சிக்கந்தர் தர்ஹா இருப்பதை அவர்கள் வலைதளப் பக்கத்தில் போய் எடுத்துச் சென்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்து, முஸ்லிம் ஒற்றுமை
தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக பல காட்சிகள் வருகின்றன. அது அனைவரும் அறிந்தது தான். அது போல பிரமலைக் கள்ளர்கள் இஸ்லாமியர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை பல விதங்களில் கடைபிடிப்பதை சுன்னத் செய்வதிலும், தலாக் எனப்படும் விவாகரத்தை துரும்பை கிள்ளிப்போடும் சடங்குகள் வாயிலாக கேள்விப்படுகிறோம். மாமன், மச்சான்களாக பழகுவது, பல கோயில்களில் முதல் மரியாதை செய்யப்படுவது என யாவும் பதிவாக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தில் மிகவும் மனதை நெகிழ வைக்கும் காட்சியொன்றை படம் பிடித்திருக்கிறார்கள். எப்படிதான் எடுத்தார்களோ தெரியவில்லை மனதை பிசைய வைக்கிறது.திருப்பரங்குன்றம் மலையை தேர் சுற்றி வருகிறது. அப்போது ‘ திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்; எனும் பாடல் ஒலிக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் முதிய இஸ்லாமிய பெண்மணி தனை மறந்து அந்தப் பாடலுக்கு வாயசைப்பதை எப்படித்தான் படம் பிடித்தார்களோ தெரியவில்லை அவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது.
கடினமான பணி
இந்த ஆவணப்படத்தின் வாயிலாக, இந்து முஸ்லிம் மக்கள் மிகச் சரியாக இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் இந்தப் பிரச்னையை மிகச் சரியாகவே கையாளுகிறது. ஆர்எஸ்எஸ் அனுப்பி வைக்கப்பட்ட மதவெறியர்கள், மக்கள் ஒற்றுமையை தகர்ப்பதற்காக,அரசியல் சுய லாபங்களுக்காக, இம்மாதிரியான ஈனத்தனமான வேலைகளில் தங்கள் அடிமைகளை வைத்து ஈடுபடுகிறார்கள். நீதித் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஒன்றிய அரசே திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்குகிறது. ஒரு பேட்டை தாதாவைப் போல, வரிந்து கட்டிக் கொண்டு வீதியில் இறங்கி, பட்டையும் கொட்டையும் அடித்துக் கொண்டு, மாண்பமை நீதியே அராஜகத்தில் ஈடுபடுவது மிக அநீதியானது என்ற குரல்கள் எதிரொலிக்கின்றன. இது இதுவரை தமிழ்நாட்டு நீதித் துறை கண்டிராதது.
அறமிக்க நீதி விசாரணைகள் எதிர்காலத்தில் நடைபெறுகையில், இந்தப் படத்தை சாட்சியமாய் சேர்க்கலாம். உண்மைத் தரவுகள் மிக்க இப்படத்தை பார்த்து நல்லதொரு தீர்ப்பை நாடு பெறக்கூடும்.அரசுகள்,அரசியல் கட்சிகள், அமைப்புகள் செய்திருக்க வேண்டிய கடினமான பணியை, தனி நபர்கள் நின்று உருவாக்கி சாதித்திருக்கிறார்கள்.இதன்மூலம் கடுமையான நெருக்கடியை மதவெறியர்கள் தரக்கூடும். மக்களின் பேராதரவுடன் அதை முறியடிப்பார்கள். இந்த ஆவணப்படத்தில் எளிய மக்கள், பிரச்னையை உருவாக்குபவர்கள், மக்கள் ஒற்றுமைக்காக பாடுபடுபவர்கள், பிரபலங்கள் என எல்லோரின் குரலுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அவரவர் கருத்தை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார்கள். மிகவும் பாராட்டப்பட வேண்டியது ஒளிப்பதிவும், படத்தொகுப்பும், ஈர்க்கும் வகையில் பேசிய குரல் கொடுத்தவர், இசையமைத்தவர், தங்கள் சக்திக்கு மீறி மக்கள் ஒற்றுமைக்காக செலவு செய்து படம் எடுத்த அன்பு இயக்குநர்கள் தவம் – தமிழ் தாசன் இருவரும் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள் .
தவம் என்று அழைக்கப்படும் தோழர் தவமணி எனது முப்பது ஆண்டு கால நண்பர் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். படைப்பாக்கத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள். வெல்லும் செயலில் ஈடுபட்டிருக்கிறீர்கள். மக்கள் ஒற்றுமைக்கான களப் போரில் நீங்கள் நிச்சயம் பேசப்படுவீர்கள். மக்களை பேச வைப்பது தானே நமது வேலை, நிச்சயம் பேச வைப்போம்.
– செ. தமிழ் ராஜ்
ஆவணப்படம்: திருப்பரங்குன்றம் பைல்ஸ்
(தொப்புள் கொடி உறவும் மரபும்)
ஆண்டு: 2026
ஒளிப்பதிவு: பிரபு
படத்தொகுப்பு: காமாட்சி ராமன்
பின்னணி குரல்: தோழர் இந்திர குமார்
வரைகலை: தவ சிவா
இசை: ஆனந்த்
இயக்கம்: தவம்- தமிழ் தாசன்
தயாரிப்பு: அறக்கலகம்




ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய தருணம். இந்து முஸ்லிம் ஒற்றுமையை எராலும் சீர்குலைக்க முடியாது. அரசியல் ஆதாயம் உங்களைத்தான் அலைகழிக்கும். வாழுங்கள். அனைவரையும் வாழ விடுங்கள். பிரிவினையை மறந்து விடுங்கள்
ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய தருணம். இந்து முஸ்லிம் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது. அரசியல் ஆதாயம் உங்களைத்தான் அலைகழிக்கும். வாழுங்கள். அனைவரையும் வாழ விடுங்கள். பிரிவினையை மறந்து விடுங்கள்