
பல்லவாரத்தில் பிரபல ரவுடி உள்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆறுமுகம். இவர் மீது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆறுமுகம் வீட்டில் இருந்தபோது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை குறித்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீஸார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த இரட்டைக்கொலை முன்விரோதம் காரணமாக ந டந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கொலை செய்யப்பட்ட ஆறுமுகம், சதீஷ் ஆகிய இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடந்ததா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இரட்டை கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பரபரப்பான பகுதியில் இரட்டை கொலை நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



