
மூடப்பட்ட துபாய் விமான நிலையம். அடுத்தபடம்: டிரோன் தாக்குதல்
ஈரான் இன்று காலை நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் திடீரென மூடப்பட்டது. அத்துடன் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிரோன் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப்படைகள் கடந்த 28-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இன்று அதிகாலை, மிகவும் பரபரப்பான துபாய் சர்வதேச விமானம் நிலையம் அருகே ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த
தாக்குதலில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி கொண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விமான நிலையம் மூடல்
இதனால் துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக விமான நிலையம் மூடப்பட்டது என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆயினும் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் ரத்து
இந்த நிலையில், தயவு செய்து யாரும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. துபாயை தலையிடமாக இயங்கும் இந்த நிறுவனம் பயணிகளுக்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “தயவுசெய்து யாரும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டாம். நிலைமை சீரானதும் புதிய தகவல்கள் உடனே பகிரப்படும். பயணிகளின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

திரும்பிய விமானம்
துபாய் விமான நிலையம் மூடப்பட்டதால், கேரளத்தின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் திரும்பியது
353 பயணிகள் மற்றும் 19 விமானப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், தனது பயணத்தின் நடுவிலேயே திரும்பியது. பயணிகள் விமான நிலைய முனையத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



