
எடப்பாடி பழனிசாமி
தைரியம் இருந்தால் அமைச்சர் மீதான வழக்கை சந்தியுங்கள். அந்த பயத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உளறிக்கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆவடி, அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 21) மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,” அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையான கூட்டணி. மக்கள் விரும்பும் கூட்டணி. விளம்பரம் செய்ய மக்களின் வரிப் பணத்தை மு.க.ஸ்டாலின் பயன்படுத்துகிறார். திட்டத்திற்காக பயன்படுத்துவதில்லை.
அத்துடன் மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதில்லை. போலி விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு போட்டார்கள். தற்போது அந்த வழக்கை திமுகவே திரும்பப் பெறுவதாக சொல்லியுள்ளது. ஆனால் என்மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் நான் நடத்துகிறேன்.
நான் நிரபராதி என நிரூபிப்பதற்காக சந்திக்கிறேன். நேற்றைக்கு முன்தினம் அமைச்சர் நேரு மீது உயர்நீதிமன்றமே வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தைரியம் இருந்தால் அமைச்சர் மீதான வழக்கை சந்தியுங்கள். அந்த பயத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உளறிக்கொண்டிருக்கிறார். ஊழல் நிறைந்த அரசு என்பதற்கு இதுவே உதாரணம்” என்றார்.



