தமிழ் பெயர் சூட்ட வேண்டும்… திருச்சியில் இந்தி திணிப்பிற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

திருச்சி ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கர்தவ்ய த்வார் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புரியாத வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்த்தவ்யத்வார்” என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *