
மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டம்.
2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி ஆட்சி பொறுப்புக்கு வருவார் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
மதுரையில் மார்ச் 1-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர் .இந்த கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரையிலும், மதுரை புறநகர் மேற்கு, விருதுநகர் மேற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி கிழக்கு ,தேனி மேற்கு ஆகிய மாவட்டங்களில் சார்பில் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்திலும் நடைபெற்றன.
மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு ,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வி.பி.எம். பரமசிவம் ,டாக்டர் பா.சரவணன், அண்ணாதுரை, எஸ்.எஸ். சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் உள்பட பலர் பங்கேற்றனர் .
இந்த கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி .முனுசாமி பேசுகையில்,” 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போது இரண்டாவது நிகழ்ச்சியாக பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மார்ச் 1-ம் தேதி மதுரை மண்ணில் பேசுகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் இந்த கூட்டணி வெற்றி பெறும் வகையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன .
மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும் கருத்துக்களை கடைசிவரை அமர்ந்து கேட்க வேண்டும். குறிப்பாக இன்றைக்கு வடநாட்டில் ஒரு கலாச்சாரம் உருவாகி வருகிறது தலைவர்கள் வரும்போது அந்த கட்சிகளின் துண்டை வீசியபடி வரவேற்பு அளிக்கிறார்கள். அதேபோன்று நமது தொண்டர்கள் நமது கழகத் துண்டை அணிந்து இது போன்ற வரவேற்பு அளிக்க வேண்டும். இன்றைக்கு கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி வருகிறார். நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அவர் முதலமைச்சராகி ஆட்சி பொறுப்புக்கு வருவார்” என்றார்.



