
மாணிக்கம் தாகூர் எம்.பி
நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில் திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி பங்கீட்டுக்குழு மட்டுமின்றி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினர். அவர்கள் கேட்ட இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை. இன்றும் (மார்ச் 4) திமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடரும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (மார்ச் 5) கடைசி தேதி என்பதால், மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை திமுக இன்று அறிவிக்க உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியானால் அதற்கும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இரண்டு சீட் காங்கிரஸ் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தரப்பில் ஒரு சீட் தான் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் விருதுநகர் தொகுதி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,, ” கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு. ஆனால், எந்த தனிநபரையும் விட கட்சியே உயர்ந்தது. தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை, ஏனெனில் ஒற்றுமையை நமது மிகப்பெரிய சக்தி” என்று பதிவிட்டுள்ளார்.



