
சி.வி.சண்முகம்
நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்காக மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
“அப்துல் கலாம் கனவு காணுங்கள் என சொன்னார். ஸ்டாலினோ ஒருபடி மேலே போய், உங்கள் கனவை சொல்லுங்கள் என கூறுகிறார். இவர் நிறைவேற்றுவாராம். ஆம் எனக்கு நயன்தாரா வேண்டும். அதை நிறைவேற்றுவீர்களா?.. இவர் (பக்கத்தில் இருப்பவரை கை காண்பித்து) நயன்தாராவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என சொல்வார். அதை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?” என்று பேசினார்.
திடீர் பல்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலினின் கனவு கூறுங்கள் என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டதாகவும், அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.



