
சாலைப்பணியாளர்களுக்கு வேலை தரக்கோரி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்.நல்லகண்ணு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு நெடுஞ்சாலைத்துறை தொழிற்சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.
வாழும் வரை மட்டுமின்றி சாகும் வரை போராட்டம் நடத்திய ஆர்.நல்லகண்ணுவின் உறுதிமிக்க எதிர்ப்பு குணம், தொழிலாளர் வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாலபாடம் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கம் கூறியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. அவரது மறைவிற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ” அரசியல் நேர்மை உங்கள் ஆளுமை. பொதுவுடமை தத்துவம் நீங்கள் பின்பற்றியது. வலதுசாரி தத்துவம் உள்ளவர்களுக்கும் உங்களைப் பிடிக்கும். உங்கள் மனிதநேய சிந்தனை, எளிமை அனைவருக்கும் பயன்பட்டது. ஏனெனில், பயனாளிகள் வரிசையில் நாங்களும் இருக்கிறோம் தோழரே.
தொழிலாளர்களின் போராட்டங்களில் பங்கேற்று எளிய மக்களின் குரலாய் திகழ்ந்தீர்கள். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திர வேட்கையோடு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொணடு சிறை சென்ற நீங்கள், சுதந்திர இந்தியாவிலும் எத்தனை எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டீர்கள். வாழும் வரை மட்டுமின்றி சாகும் வரை போராட்டம் நடத்திய உங்களின் உறுதிமிக்க எதிர்ப்பு குணம், தொழிலாளர் வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாலபாடம்.
மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, தொழிலாளர் நலனுக்காக காலம் முழுவதும் சிந்தித்த சிந்தனை மரணம் இல்லாமல் வாழும். உங்கள் உடலுக்கு மட்டும் செவ்வணக்கம் செலுத்தி மன வலியோடு விடை கொடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



