
குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை வீட்டிற்கு அழைத்து அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசளித்தார்.
சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மை பணியாளர் கடந்த 11-ம் தேதி தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையோடு கிடந்த கவரில் 45 சவரன் தங்க நகைகள் இருப்பதை கண்டு பத்மா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் பத்மா ஒப்படைத்தார்.
ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும் பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் செயலை பாராட்டிய ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினை பரிசாக அளித்தார். . இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



