
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஒரு சிலர் பணப்பட்டுவாடா செய்வதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், கடந்த 2024-ம் ஆண்டு ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான இடங்களில் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை சென்னை அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2024-ம் ஆண்டு ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், ஜாபர் சாதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



