
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, மிகப்பெரிய பரிசு; இந்திய அணிக்கு ரூ.131 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது
அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இறுதிப் போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடியது.
இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது சஞ்சு சாம்சனின் அபாரமான ஆட்டம். இறுதிப் போட்டியில் 89 ரன்கள் குவித்து இந்தியாவின் ரன் உயர்வை துரிதப்படுத்திய சஞ்சு, தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் எடுத்தார்.சஞ்சு பேட்டிங்கில் ஜொலித்ததை போல ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவை நொறுக்கினார். 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த நிலையில், மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.131 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அணி உலகக் கோப்பையை வென்ற போது, பிசிசிஐ ரூ.125 கோடியை வழங்கியது.
2026-ம் ஆண்டு அடைந்த, இந்த புகழ்பெற்ற வெற்றிக்காக, அதை ரூ.6 கோடியை அதிகப்படுத்தி ரூ.131 கோடியாக வழங்க வாரியம் முடிவு செய்துள்ளது.
வீரர்களைத் தவிர, பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களும் இந்தத் தொகையில் ஒரு பங்கைப் பெறுவார்கள். “இந்திய அணியின் இந்த ஈடு இணையற்ற சாதனைக்காக பெருமை கொள்வதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. வீரர்களின் கடின உழைப்பும் மன உறுதியும் இந்தியாவை மீண்டும் உலகின் உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.



