ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார்:டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி.

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அவரது வீடு, அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் காமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி. அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.

இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என நம்புகிறோம். அந்தச் செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். காமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது. மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும்வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *