
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டைக் குறைசொல்லிப் பேச பாஜகவிற்கு தகுதி இருக்கிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 25) பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது விழாவில் அவர் பேசுகையில், , “ உங்க மாவட்டத்துக்கு வந்துட்டு உங்களுக்குப் புது அறிவிப்புக்களை வெளியிடாமல் போனால் நல்லா இருக்குமா? மேடையில் இருப்பவங்க சும்மா இருப்பாங்களா? அதுவும் காங்கிரஸ் கட்சியைக் கேட்க வேண்டாம். என்னை தொலைச்சு எடுத்துடுவாங்க.. உரிமையோட. அதையெல்லாம் உணர்ந்து குமரி மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புக்களை வெளியிடுகிறேன்.
தவிக்கும் பாஜக
அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுக்க கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து. மணிப்பூர் இன்றும் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. அசாமில் இன்னும் மோசம்,. அம்மாநில முதலமைச்சர் தன் பொறுப்பு மற்றும் மாண்பை மறந்து, முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்குகிறார். பிஹாரில் பள்ளிகள் அருகே இறைச்சிக் கடைகள் இருந்தால், அகற்றுவோம் என்று மாநில துணை முதலமைச்சர் பேசுகிறார். இப்படியொரு நிலைமையை தமிழ்நாட்டில் கட்டமைக்கத்தான் அவர்கள் (பாஜக) தவியாய்தவிக்கின்றனர். ஆனால், நமது திராவிட மாடல் அரசில் மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுகிறது.
சிறுபான்மையினர் பாதுகாப்பு
வக்ஃபு திருத்தச் சட்டம், சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பெரும்பான்மையினர் சகோதரத்துவத்துடன் இருக்கின்றனர். அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர். வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். பாஜகவிடம் வெளிப்படையாகவே கேட்கிறேன். நீங்கள் எப்போதுதான் வன்முறையை விட்டுவிட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள்? எப்போது வெறுப்பையும் பிரிவினையையும் விதைப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான நல்ல விஷயங்களை பேசுவீர்கள்?
அடுக்கடுக்கான கேள்விகள்
தமிழ்நாட்டைக் குறைசொல்லிப் பேசுவதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளக்கூடிய எந்த மாநிலம், தமிழ்நாட்டைவிட சிறப்பாக ஆளப்படுகிறது? தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்? இதைத் தீர்த்து வைப்பதாகத்தானே 12 ஆண்டுகளுக்குமுன் ஆட்சிக்கு வந்தீர்கள் என்று அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.



