தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இத்தனையா?: வெளியான என்டிஏ உத்தேச பட்டியல்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் உத்தேச தொகுதிப்பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டின்படி தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக மூலம் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக, பாமக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இதன் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவித்து வருகிறார். அத்துடன் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற பல தொகுதிகளை பாஜக கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் டெல்லியில் இன்று (மார்ச் 20) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒரு மணி நேரமாக ஆலோசனை நடத்தினார். இதன் பின் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என்றும், 4 நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 166 தொகுதிகளில் அதிமகவும், பாஜக 29 தொகுதிகளிலும், அமமுக 9 தொகுதிகளிலும், தமாகா 4 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பாமக 17 தொகுதிகள், புதிய நீதிக்கட்சி 2, ஐஜேகே 2, பார்வர்ட் பிளாக் 1, புரட்சி பாரதம் 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி 1, தமமுக 2, புதிய தமிழகம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதில் சில கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *