
நடிகர் கமல்ஹாசன்
சென்சார், தணிக்கை என்ற சொற்களை ஊடகங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரைப்படங்களின் தன்மையை பொறுத்து அதற்கான சான்றிதழ் தரும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தை சென்சார் அல்லது தணிக்கை வாரியம் என்று அழைப்பது தொடர்கிறது. ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் என்று இருந்த பெயர் 1983-ம் ஆண்டிலேயே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் என்று மாற்றப்பட்டடது. ஆனால், திரைப்பட சான்றிதழ் வாரியம் என்று சொல்லாமல் சென்சார், தணிக்கை என்ற சொற்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் சென்சார் என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.



