பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 2… சிவமணி

மொத்த கூட்டமும் ஆடிய ஒத்தப் பாட்டு!

ஒரு காலத்தில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் கோயில் திருவிழாக்கள் இலக்கிய விழாக்களாக திகழ்ந்தன. மதுரை அரசமரம் பிள்ளையார் கோயில் திருவிழா அவ்விழாக்களில் முதன்மையாகத் திகழ்ந்தது. இந்த கோயில் திருவிழாக்களில் பேசாத தமிழ் சான்றோர்கள் இல்லை. அனல் பறக்கும் பட்டிமன்றங்கள் நடந்த இடமது. எரிந்த கட்சி, எரியாத கட்சி போட்டி நடந்த மதுரையல்லவா? தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் மிகப்பெரிய சொற்போர் நடந்த இடமது. அப்போதெல்லாம் பக்தி என்ற உணர்வைத் தாண்டி மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் விழா கமிட்டியாரிடம் இருந்தது.

கலை, இலக்கியம்
இது போலத்தான், மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மன் திருக்கோயிலும். இந்த கோயிலில் இலக்கியத்துடன் கலையும் சேர்ந்து கொள்ளும். கடந்த வாரம் முழுவதும் இக்கோயிலில் 75-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த கோயிலில் நிகழ்ச்சி நடத்தி விட்டால், புகழ் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை மதுரையில் பல கலைக்குழுக்களுக்கு உள்ளது. ஆனால், அவ்வளவு எளிதாக ரிசர்வ் லைன் மாரியம்மன் மேடையில் ஏறி விட முடியாது. விழா கமிட்டியாரின் சிபாரிசு இல்லாமல் எதுவும் நடக்காது.சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, கு.ஞானசம்பந்தன், இளம்பிறை மணிமாறன் ஆகியோர் தலைமையில் சிந்தையைக் கவரும் பல பட்டிமன்றங்கள் இங்கே நடந்துள்ளன.

நடன நாட்டிய கலைக்குழுக்கள்
இன்று தமிழகம் முழுவதும் இருக்கும் நடன நாட்டிய கலைக்குழுக்களுக்கு ஆதர்சமாய் திகழும் உலகப்புகழ் பெற்ற அபிநயா நடன, நாட்டிய கலைக்குழு (இப்போது கலைச்சங்கம்) இந்த கோயிலில் தான் அறிமுகமானது. இந்த கலைக்குழுவில் இருந்து நர்த்தனா என்ற கலைக்குழு பிறந்தது. இக்குழுக்கள் மட்டுமின்றி பிளேயிங் ஃபேர்ட்ஸ் உள்பட பல நடன நாட்டியக்லைக்குழுக்கள் இங்கே மேடையேறியுள்ளன. இந்த கலைக்குழுக்களில்
முதல் பாடலாக எதை மேடையேற்றுவது என்று மிகப்பெரிய பட்டிமன்றமே நடக்கும். ஏனெனில், முதல் பாடல் பக்தி பாடல். அதற்கு நடனமாட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பாடல் இருக்க வேண்டும். ஆத்தா மாரியாத்தா வரம் கொடுப்பா, அம்மன் கோவில் வாசலிலே, மாரியம்மா மாரியம்மா போன்ற பாடல்களின் கலைக்குழுக்களின் முதல் பாடல்களாக இருக்கும். ஆனால், புதிதாக மேடையேறும் கலைக்குழுக்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைக்கும். நடனம் என்றவுடன் திரையிசையில் மட்டும் தானா என்று கேள்வி எழுப்பக்கூடிய கலைக்குழுக்கள் அவை.

அம்மன் பாடல்
முதல் பாடலிலேயே நிகழ்ச்சி பார்க்க வந்த மொத்த கூட்டத்தையும் சாமியாடிய வைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அப்படி மக்களை சாமியாட வைத்த ஒரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது. இவர் பாடிய அம்மன் பாடல்கள் தனிச்சிறப்பு கொண்டவை. 40ஆண்டுகளுக்கு முன்பு அவை ஒலிப்பதிவு செய்யப்பட்டவை என்றாலும் இன்றளவும் உயிர்ப்புடன் திகழ்கின்றன. அதற்குக் காரணம் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் மற்றும் அப்பாடல்களுக்கு போடப்பட்ட மெட்டும், வரிகளும் தான் காரணம்.

சில சினிமா பாடல்களைக் கேட்டவுடன் மனதிற்குள் வரிகள் பதிந்து விடும். அப்படித்தான் சில பக்தி பாடல்களும் வரியும். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் பாடல் ஒலிக்கத் துவங்கியுடன் கேட்பவர்களுக்கும் பிரம்ப்டர் இல்லாமலே வரிகள் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர்களின் முகங்கள் எப்படி இருக்கும், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்றளவும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு கவிஞர் தான் சிவமணி. அவர் எழுதிய ஒரு பாடலுக்குத்தான் ரிசர்வ் லைன் மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் நிகழ்ச்சி பார்க்க மொத்த கூட்டமும் சாமியாடியது.

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா…
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா…

ஒரு பக்தி பாடலின் தாளக்கட்டிற்குள் ஆட்டம் போட வைக்கும் மேஜிக் நிகழ்த்திய இந்த பாடலுக்கு இசையமைத்தவர்கள் சோமு- கஜா. மாரியம்மன் பாடல்கள் என்ற தலைப்பிலான இசைத்தட்டில் இடம் பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் அத்தனை பாடல்களையும் எழுதியவர் சிவமணி தான். இவர் எழுதிய அத்தனை பக்திப் பாடல்களும், திரைப்பட பாடல்களுக்கு நிகரானவை..

களைகட்டிய திருவிழா
ஒரு பக்தி பாடலின் மெட்டுக்குள் எல்லோரையும் கவரும் வகையில் வரிகளை எழுதுவது சுலபமல்ல. ஆனால், பாடலாசிரியர் சிவமணி அதை அற்புதமாக செய்துள்ளார். இலக்கியச்சுவையோடு எளிமையான மொழியில் எல்லோரையும் கவரும் வகையில் பக்திப் பாடல்களை எழுதியவர் சிவமணி தான்.

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா நல்ல
வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா

அம்மனைப் போற்றி மன அமைதி வேண்டுவதுடன் அருள் கேட்டு பாடப்படும் வரிகள் என்றாலும், கேட்பவரை ஆட்டம் போட வைக்கும் வகையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய மிக பிரபலமான பாடல் தான் மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை களைகட்ட வைத்தது.

யூடியூப் பதிவர்கள்
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், சூலூர்பேட்டை கலங்கி ஆற்றங்கரையில் உள்ள புகழ்பெற்ற செங்காளம்மா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. சனிக்கிழமைகளில் மட்டுமின்றி ஆண்டுதோறும் இந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் பிரபலம். இந்த கோயிலில் குடியிருக்கும் அங்காளம்மாவை போற்றி எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய புகழ்பெற்ற பாடல் உண்டு. இந்த பாடலில், எல்.ஆர்.ஈஸ்வரியின் கம்பீரம் குறையாத குரல் பாடல் வரிகளைக் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கும்..

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா.. கரு மாரியம்மா…..

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடலை எழுதியதும் கவிஞர் சிவமணி தான் என்று நாம் குறிப்பிட காரணம் இருக்கிறது. தற்போது பழைய பக்திப் பாடல்களை எடுத்து யூடியூப்பில் நிறைய பேர் பதிவேற்றம் செய்கிறார்கள். அதில், பாடலைப் பாடியவர்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால்,. பாடலை எழுதியவர்களை மறந்து போகிறார்கள். சிலர் பாடலாசிரியர்களின் பெயர்களை தவறாக பதிவிடுகிறார்கள். ஒருவர் செய்யும் தவறை மற்றவர்களும் பின்பற்றுவதால் பாடலை எழுதியவர் யார் என்பதை காலம் மறந்து விடும். அந்த தவறு நடக்கக் கூடாது.

அம்மனைப் போற்றி எழுதப்பட்ட அங்காளம்மா பாடலில்,

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி

என்று உருவகப்படுத்தப்படும் காட்சிகள் நினைத்துப் பார்க்க முடியாதவை. பக்திப் பாடலுக்குள் ஒளிந்து கிடக்கும் ஒப்புமைகள் பல நேரம்
நம்மையும் அறியாமல் பிரம்மாண்டத்தை உருவாக்கி விடும். அப்படியான பாடல் தான் இது. இப்படியான பாடல்களைக் கேட்க கேட்க நமக்குள் ஏற்படுத்தும் ரசவாதம் பக்தி என்ற உணர்வைத் தாண்டி இசையை ரசிக்க வைத்து விடுகிறது.

பாம்பு பாடல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகும். ஏனெனில், இங்குள்ள கருமாரி அம்மன் கோயில் மற்றும் சம்பந்தர் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் கோயிலுக்குப் பெற்றது. இந்த கோயிலில் உள்ள அம்மனை போற்றி சிவமணி எழுதிய பாடலின் வரிகள் மிக பிரபலமானவை.

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி
நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி
நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாறி
ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி
கருநாகமாக மாறி கருமாரி சுகுமாரி மகமாயி…

அம்மனை பாம்பாக உருவகப்படுத்தி எழுதப்பட்ட இந்த பாடல் தான், பல திரைப்பட பாடல்களுக்குத் தோற்றுவாய் என்பது நிஜம்.எல்.ஆர்-ஈஸ்வரி பாடிய இந்த பாடல், முதல் மெதுவாக நகரும் காற்று சூறாவளியாக மாறுவது போல மாறி விடுகிறது. ஏனெனில், வேற்காட்டில் வீற்றிருக்கும் என்று பல்லவியில் சாந்தமாக பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி அனுபல்லவியில் கொஞ்சம் டெம்போவை ஏற்றுவார். சரணத்தில் உச்சத்திற்கு சென்று விடுவார். இந்த வரிகளைக் கவனித்தால் உங்களுக்கு அது புரியும் என்று நினைக்கிறேன்.

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்
வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்
பாற்கடலாய் அவள் கருணை பெருகிடவே செய்திடுவாள்
பக்தர்களை கண்ணிமைபோல் எப்போதும் காத்திடுவாள்…

ஒரு பக்திப் பாடலில் அதிகபட்ச ள் என்ற சொல், பயன்படுத்தப்பட பாடல் இதுவாகத்தான் இருக்கும். கவிஞர் சிவமணியின் தமிழ்ப்புலமைக்கு சான்று தரும் வகையில் அமைந்த அவர் எழுதிய பாடல்களின் ஒவ்வொரு வரியும் உள்ளன. அப்படி ஒரு பாடல் அனைத்து பங்குனி திருவிழாக்களிலும் தவறாமல் இடம் பெறுகின்றன.

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.

சபரிமலை ஐயப்பன்
எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றும், சிவாஜி படங்களில் இடம் பெற்ற சிவாஜி பாடல்கள் என்றும் கருதும் சராசரி ரசிகர்கள் மத்தியில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்கள், அப்படித்தான் பார்க்கப்படுகின்றன. ஆனால், அந்த புகழ்பெற்ற பாடலுக்குப் பின் இருக்கும் இசையும், பாடல் வரிகளைத் தந்தவர்களையும் மறக்கச் செய்து விடுகிறது. அப்படி காலம் மறந்த கவிஞன் தான் சிவமணி. அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் இல்லாமல் சபரிமலை ஐயப்பன் பூஜை இல்லை எனலாம்.

குறிப்பாக, ஐயப்பன், முருகன் பக்திபாடல்கள் என்றால் கலைமாமணி கே.வீரமணி அவர்களுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கே.வீரமணி பாடிய பக்திப் பாடல்கள் ஒவ்வொன்றும் புகழ்பெற்றவை. கந்தர்வ கான ஜோதி எனப் புகழப்படும் கே.வீரமணி
பாடிய பல பக்திப் பாடல்களை எழுதியவர் சிவமணி. ஐயப்பனின் சந்நிதானத்தையும், சபரிமலை பயணத்தையும், சரண கோஷத்தையும் விவரிக்கும் இந்த பாடல் கே.வீரமணியின் கம்பீரமான தொகையறாவுடன் ஆரம்பிக்கும்,

கன்னி மூல கணபதி பகவானே சரணம்
கந்தனே சிங்கார வேலனே சரணம்
அன்னை மாளிகைப்புரத்தம்மா தேவியே சரணம்
அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியே
சரணம் ஐயப்பா…

இதன் பின் ஒலிக்கும்,

மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்
மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம்
கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சன்னிதானம்
பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சன்னிதானம்

இவ்வளவு அற்புதமான பாடலை எழுதியவர் வேறு யாருமல்ல, சிவமணி தான். ஆனால், தமிழ்பாடல் வரிகள் டாம் காம் என்ற இணைய தளத்தில் இந்த பாடலை எழுதியவர் வீரமணி சோமு என்றும், இசையமைப்பாளர் வீரமணி கிருஷ்ணா என்றும் உள்ளது. மலினமான இந்த பிழைகள் தான், பிற்காலத்தில் போலிகளை உண்மைகளாக்கி விடும். ஒரு பாடலை உருவாக்குவது இலகுவான வேலையல்ல. இசையின் மெட்டுக்கு எழுதப்பட்ட வரிகளுக்கு ஏற்ற வகையில் தாளக்கருவிகளைப் பயன்படுத்தும் இசைக்கலைஞர்களின் கூட்டு உழைப்பு, அதை ஒலிப்பதிவு செய்யும் கலைஞர்களின் விடா முயற்சி ஆகியவை சிலரின் இணைய தளப்பிழைகளால், படைப்பாளிகளை புறந்தள்ளி விடுகிறது.

கல்லும், முள்ளும்
அம்மன் பாடல்களைப் போலவே, ஐயப்பன் புகழ்பாடும் பாடல்களுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஐயப்பனை போற்றி நிறைய இசைத்தட்டுகளும், ஒலிநாடாக்களும் வந்துள்ளன. அதில் ஒரு புகழ்பெற்ற பாடல்,

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா……
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா …….

சாமி பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா
இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா

இந்த பாடலை எழுதியவரும் சிவமணி தான். இப்படியான பல கவிஞர்கள் ஏன் திரைப்படத்துறைக்கு வராமல் போனார்கள் என்ற கேள்வி எனக்கு உண்டு. அற்புதமான இசையறிவு கொண்ட இவர்களால் எழுதப்பட்ட பக்திப் பாடல்கள் கடந்தும் வாழ்கின்றன. அவர்களின் இசைபயணம் ஆன்மீக உலகத்திற்குள்ளேயே முடிந்து போனதே என்ற சோகமும் உண்டு. ஐயப்பன் பாடல் என்றவுடன் கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்ற பாடல் நினைவிற்கு வரும்.

அந்த பாடலின் துவக்கம்,

இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்

என்ற தொகையறாவுடன் கே.வீரமணி குரலில் ஒலிக்கும் இந்த பாடல்,

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் அய்யப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்

கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து பம்பைக்கு பயணப்படுவதை ஒரே பாடலில் சிவமணி சொல்லியிருப்பார். சிவமணி எழுதிய எத்தனையோ புகழ்பெற்ற பக்தி பாடல்கள் உள்ளன. சோமு- கஜா இசையில் கே.வீரமணி, ராதா பாடிய ஸ்ரீஅஷ்டலட்சுமி பக்தி பாடல்கள், பக்தி இசைப்பிரியர்களுக்கு விருந்து என்றே சொல்லலாம். உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி. செல்வத்திருமகளாம் மோகன வள்ளி என்ற அற்புதமான பாடல்களை எழுதிய சிவமணி எப்படியிருப்பார் என்ற ஆர்வம், உங்களைப் போல எனக்கும் இருக்கிறது.

-ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/

2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *